தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இருப்பிடங்களுக்குச் செல்பவர்களை இலக்காகக் கொண்டு எழுந்தமானமாக பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. வர்த்தக வலயங்களில் தொழில் புரிபவர்கள் மற்றும் கட்டுமான தொழில் புரிபவர்கள் உள்ளிட்ட குழுவினர் இதில் பிரதானமாக உள்ளடக்கப்படுவார்கள் என்று தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
அடுத்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
அதன் நிமித்தம் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் தொழில் புரிபவர்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வார்கள். குறிப்பாக வர்த்தக வலயங்கள் , கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களே அதிகளவில் கிராம பகுதிகளுக்குச் செல்வர்.
இவர்களில் ஒருவருக்கேனும் கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்கள் மூலம் கிராமங்களில் வைரஸ் பரவக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது.
எனவே தான் இவர்களை இலக்காகக் கொண்டு பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
0 Comments