Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்! மைத்திரி வேண்டுகோள்

 


தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் -ஆர்ப்பாட்டங்கள் நடத்தி எதைச் சாதிக்கப் போகின்றார்கள் என்று அமைச்சர்கள் சிலர் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

"கடந்த எமது ஆட்சியில் தமிழர்களின் மனதை நாம் வென்றிருந்தோம். அதேவேளை, சர்வதேச சமூகத்தின் மனதையும் வென்று காட்டியிருந்தோம். ஆனால், இந்த ஆட்சியில் அவற்றை ஏன் சாதிக்க முடியாமல் உள்ளது என்பது தொடர்பில் அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதைவிடுத்து இன முறுகலை மேலும் வலுவடையைச் செய்யும் விதத்திலும், சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் அரசிலுள்ள சிலர் கருத்துக்கள் வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் கவனம் செலுத்த வேண்டும். பிரச்சினைகளை ஏற்படுத்த முனைவோரை ஜனாதிபதியும் பிரதமரும் தூரத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆட்சியைத் திறம்பட முன்னெடுக்க முடியாது.

இந்த அரசில் நாம் முக்கிய பங்காளிக் கட்சியாக இருக்கின்றோம். ஆனால், எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஓரங்கட்டுவதில் அரசிலுள்ள மேற்படி உறுப்பினர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர். அவர்கள் எமக்கும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதில் குறியாக உள்ளனர். ஆனால், நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உரிய கெளரவத்தை வழங்கி வருகின்றோம்.

நாடு இன்று நாலா புறங்களிலிருந்தும் நெருக்குவாரங்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க நாம் தயார். ஆனால், நாட்டின் முக்கிய இடங்களை சர்வதேச நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க நாம் சம்மதிக்கமாட்டோம்" என்றார்

Post a Comment

0 Comments