நூருல் ஹுதா உமர்.
காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கரைவாகுபற்று வயல் காணிகளை மண்நிரப்பி மூடி கட்டிடங்கள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும் எனும் உறுப்பினர்களின் பிரேரணையால் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்ற நேற்றைய அமர்வில் வாத பிரதிவாதங்கள் நடைபெற்றது. மண் மூடி நிரப்புவதை நிறுத்து முகமாக விளம்பர பலகை இடவேண்டும் என்றும் சட்டத்தரணிகள் இருவரை கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவிசாளர் கி. ஜெயசிறில் முன்வைத்த கோரிக்கையை உதவிதவிசாளர் ஏ.எம். ஜாஹீர் எதிர்த்தார்.
அவற்றை கண்காணிக்க விவசாய அமைச்சு, விவசாய திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் என பல்வேறு அரச நிறுவனங்களும் அவர்களிடம் அரச சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். மக்களின் பணத்தை வீணடிக்காமல் அவ்வாறான முன்னெடுப்புக்களை அவர்களை வைத்து செய்வதே சிறப்பு என்றார். இதற்கு பதிலளித்த தவிசாளர், தண்டப்பணங்கள் அறவிட்டு எமக்கே அனுப்புகிறார்கள். நாமும் சில விடயங்களை கையாள முடியும். அதற்கு சட்டத்தில் இடமுண்டு. விளம்பர பலகைகளை காட்சிப்படுத்த எம்மிடமே வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச செயலகம் என்பன அனுமதி பெறுகிறார்கள். எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில் சகல விடயங்களும் இருக்கிறது. என்றார்.
இங்கு பேசிய காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில், நீர்ப்பாசன திணைக்களம், விவசாய துறை சார்ந்த அதிகாரிகளிடம் கலந்துரையாடி மாற்றுவழியை பற்றி சிந்திக்க வேண்டும். தொழிநுட்ப அறிவில்லாமல் நாம் எதைத்தான் பேசினாலும் அது நிறைவேறாது. இன்று மாளிகைக்காட்டுக்கு இருக்கும் இந்த நிலை சனத்தொகை நெருக்கம் காரணமாக நாளை காரைதீவுக்கும் வரும் என்றார். பிரதேச சபை உறுப்பினர் குமாரஸ்ரீ மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஜெயராணி ஆகியோர் உரையாற்றும் போது காரைதீவு 09,10,11,12ம் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெட்டுவாய்க்கால் நிந்தவூர் வடிச்சலில் நீர் நிரம்பி மக்களின் வீடுகளுக்குள் புகுந்து கொள்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்றனர். இந்த விவகாரம் வாக்கெடுப்புக்கு வந்த போது சகல தமிழ் உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
0 Comments