Advertisement

Responsive Advertisement

இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறிய விடயம் - நாடாளுமன்றில் நன்றி சொன்ன சுமந்திரன்

 


தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக முன்னெடுக்கபட வேண்டும் எனவும், அதிகார பகிர்வு விடயத்திலும் அரசியல் அமைப்பில் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டை கையாளும் என தாம் நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முன்வைத்துள்ள கருத்துகளுக்காக அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச்சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் முன்வைத்துள்ள கருத்தொன்றை சபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் தமது ஒத்துழைப்புகள் நீண்டகாலமாக காணப்பட்டுகின்றது.

அதேபோல் இலங்கையின் அரசியல் தளத்தில் இன ரீதியிலான ஒத்துழைப்பை தாம் எதிர்பார்க்கின்றோம் எனவும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக இடம்பெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதில் அதிகார பகிர்வு விடயத்திலும் அரசியல் அமைப்பில் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டை கையாளும் என தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.

அதேபோல் ஜனாதிபதியும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு உறுதிப்பாடு ஒன்றினை கொடுத்துள்ளார். அதாவது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என சகலரதும் நலன்களுக்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதியும் வாக்குறுதியளித்துள்ளார். அரசாங்கத்தின் உண்மையான எதிர்பார்ப்பு இதுவென்றால் அதற்காக எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments