(வி.சுகிர்தகுமார்)41 நாட்களின் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகல பிரதேசங்களும் இன்று முதல் விடுவிக்கப்பட்டன.
கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளின் சகல பிரதேசங்களும் கொரோனா அச்சம் காரணமாக அரசாங்கத்தினால் முடக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 5, 14, மற்றும் நகர் பிரிவு 3 உம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 8/1, 8/3, 9 ஆகிய பிரிவுகளும் அட்டாளைச்சேனை-08 பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனை-1 ஓலுவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த 09 பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரிவுகள் விடுவிக்கப்பட்டன.
இவ்வாறு தொடர்ந்தும் முடக்கப்பட்டிருந்த 9 பிரிவுகளும் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இதனை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் உறுதிப்படுத்தினார்.
ஆயினும் தொடர்ந்தும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறும் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேநேரம் நேற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிகிராமம் தொடக்கம் அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பகுதி வரையிலான பிரதேசங்களில் முகக்கவசம் இன்றி சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட பலர் மீது பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.
இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டப்பணம் விதித்துள்ளதுடன் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் சிறையில் அடைக்கப்படுவர் எனவும் நீதிவான் எச்சரித்ததாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மக்களது அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதுடன் அரச திணைக்களங்களும் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதேநேரம் வியாபார நடவடிக்கைகளும் வழமைபோன்று இடம்பெறுவதுடன் போக்குவரத்துகளும் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது.
இது இவ்வாறிருக்க கிழக்கு மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1381 ஆக உயர்ந்துள்ளதுடன் 7 மரணங்களும் நிழந்துள்ளன. இதில் கல்முனை பிராந்தியத்தில் 868 ஆக உயர்வடைந்துள்ளபோதும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இனங்காணப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன் ஓளரவு கட்டுப்பாட்டிற்கு வந்திருக்கின்றமை கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் அறிக்கை மூலம் அறிய முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments