Advertisement

Responsive Advertisement

அவதானமாக இருங்கள்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

 


நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை மற்றும் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் தொடர்பான முக்கிய விடயங்கள் தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விசேட அறிவிப்பில், வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ளது.

இது திருகோணமலை கரைக்குக் கிழக்காக ஏறத்தாழ 370 கி.மீ தூரத்தில் வட அகலாங்குகள் 9.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 84.5E இற்கும் இடையில் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியானது அடுத்த 48 மணித்தியாலங்களில் மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளுக்கு மேலாக வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு கரைகளை அண்மித்ததாக இந்தியாவின் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழை நிலைமை:


புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து மாத்தறை ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை:

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக அல்லது உயர் அலைகளுடன் கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments