உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பலர் இருந்தபோதும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை மாத்திரம் கைது செய்தமை நியாயமில்லை என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் ஏற்றுக்கொண்டார்.
இலங்கையின் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்றைய தினமும் 8ஆவது தடவையாக விசாரணைகளை நடத்தியிருந்தது.
விசாரணைக்காக முற்பகல் 9.45 அளவில் ஆணைக்குழு முன்பாக முன்னிலையாகியிருந்த முன்னாள் அரச தலைவர் மைத்திரியிடம் 6 மணிநேரத்திற்கும் அதிகமாக குறுக்கு விசாரணைகள் நடத்தப்பட்டன.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ சார்பில், சிரேஸ்ட சட்டத்தரணி தில்சான் ஜயசூரிய நேற்று முன்னெடுத்த குறுக்கு விசாரணைகளை நடத்தியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றிலிருந்து கிடைத்த தகவலை, அப்போதைய தேசிய உளவுச் சேவை பிரதானி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன அரச தலைவருக்கு அறிவிக்காமை ஊடாக அவரது பொறுப்பை மீறியுள்ளார் அல்லவா என சிரேஸ்ட சட்டத்தரணி டில்சான் ஜயசூரிய வினவினார்.
அதற்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, ஓர் அதிகாரியை மட்டும் கடமை தவறியதாக குறிப்பிட நான் விரும்பவில்லை என்றும், தாக்குதல் நடக்கப் போவதாக தகவல் கிடைத்தும், அதனை தனக்கு அறிவிக்காத அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது மீள கேள்வியைத் தொடுத்த சிரேஸ்ட சட்டத்தரணி தில்சான் ஜயசூரிய, அப்படியானால் குறித்த பொறுப்புத் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலரும், முன்னாள் பொலிஸ் மா அதிபரும் மட்டும் 4 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை நியாயமானதில்லை அல்லவா என வினவினார்.
அதற்கு பதிலளித்த முன்னாள் அரச தலைவர், ஆம் அது நியாயமில்லை. குறித்த தாக்குதலுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய பலரும் வெளியே உள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவையும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவையும் கைது செய்தமை நியாயமில்லை என்றார்.
இதேவேளை நேற்றைய தினம் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளுடன் அவர் மீதான குறுக்கு விசாரணைகள் மற்றும் வாக்குமூலம் பதிவு என்பன நிறைவுற்றிருப்பதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
0 comments: