ஏ.எச்.ஏ. ஹுஸைன்சகல திணைக்களத் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் சகல கிளைத் தலைவர்கள் ஆகியோருக்கு மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரால் விஷேட அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள அந்த அறிவுறுத்தலில் அலுவலர்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடைமுறைகளைக் கைக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இனங்காணப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு மேலும் இந்நோய்த் தாக்கத்திலிருந்து அலுவலர்களையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
இதனடிப்படையில் கீழ்வரும் விடயங்களை சகல அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அலுவலகங்களில் பதவிநிலை உத்தியோகத்தர்களின் கடமைகள் அத்தியாவசியமாக உள்ளதால் நகல நாட்களும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் சமுகமளிக்க வேண்டும் என்பதுடன் ஏனைய உத்தியோகத்தர்களில் 50 சதவீதமான உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடச் செய்வதுடன் தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் சகல உத்தியோகத்தர்களும் கடமைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அவர்களது சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
வீடுகளில் இருந்து கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் கடமைகளை கிளைத் தலைவர்கள் நிறுவனத் தலைவரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்வதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
தங்களது அலுவலகங்களில் கடமையாற்றும் 2020ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிப் பயிலுநர்களை வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்கு ஏற்றவாறு ஒழங்குகளை மேற்கொள்வதுடன் அவர்களுக்கான கடமைகள் தொடர்பான பட்டியலை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
பொதுப் போக்குவரத்துக்களைப் பாவித்தும் வெளி மாவட்டங்களிலுமிருந்தும் கடமைக்கு வருகை தரும் உத்தியோகத்தர்களை அண்மையில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றுவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அத்தியாவசியமான கூட்டங்கள் தவிர ஏனைய கூட்டங்கள் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பொது மக்கள் தினமான திங்கள்கிழமையில் மாத்திரம் பொதுமக்கள் அவர்களது கடமைகளை அலுவலகத்தில் நிறைவேற்றுவதற்குரிய ஒழங்குகளை மேற்கொள்வதுடன் ஏனைய நாட்களில் அலுவலகங்களில் சமகமளிப்பதற்கு இடமளிக்காமல் இருப்பது உகந்ததாக அமையும் என்பதுடன் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய படிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் பெயர் விலாசம் அடையாள அட்டை இலக்கம் தொலைபேசி இலக்கம் போன்றவற்பை; பதிந்து தேவையேற்படும்போது உரிய தரப்பினருக்குக் கையளிக்கக் கூடியவாறு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அலுவலகத்திற்கு வருகைதரும் உத்தியோகத்தர்களினதும் பொதுமக்களினதும் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்து 37.6 பாகைக்கு மேல் அதிகரித்துக் காணப்படுமிடத்து அவர்களை அலுவலகத்தினுள் அனுமதியாது அறிவுறுத்தல்களை வழங்குவதுடன் உரிய தரப்பினருக்கு அறிவிக்கவும் வேண்டும்.
வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் இந்த மாவட்டத்திற்குள் பிரவேசிப்போர்பற்றிய விவரங்களைப் பெற்று அதுபற்றி மாவட்டச் செயலாளருக்கு அறிவிக்க வேண்டும்.
அலுவலகங்களில் கடமையாற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் 6 மாத சிசுவைக் கொண்ட பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருட்பட குறிப்பிட்ட சில தவிர்க்கமுடியாத நோய் காரணமாக இலகுவில் நோய்த் தொற்றுக்குள்ளாகக் கூடிய உத்தியோகத்தர்கள் இருப்பின் அவர்களின் நலனையும் அலுவலகத்தில் அவர்களின் தேவைப்பாட்டையும் கருத்திற் கொண்டு வீட்டிலிருந்தவாறே கடமைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க பணிக்க வேண்டும்.
0 Comments