இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்த நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மொறட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 84 வயது பெண் ஒருவர், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 70 வயது ஆண் ஒருவர் மற்றும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 75 வயது ஆண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குறித்த மூவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இவர்களில் மொறட்டுவை பிரதேசத்தை சேர்ந்த கொரோனா தொற்றாளர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்153 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று மாத்திரம் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மேலும், பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை ஆகிய கொரோனா கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 17 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்று வந்த 311 பேர் குணமடைந்து நேற்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 464 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 652 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரை 6 இலட்சத்து 72 ஆயிரத்து 100 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: