கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 80 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 15 பேருக்கும், அம்பாறை பிராந்தியத்தில் 8 பேருக்கும், கல்முனைப் பிராந்தியத்தில் 21 பேருக்குமாக மொத்தம் 124 பேர் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் இனங்காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் நான்கு வைத்தியசாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச தைத்தியசாலையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையும், கல்முனையில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையும், அம்பாறையில் தமன பிரதேச வைத்தியசாலையும் மேற்படி கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலைகளாக மாற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கிராமங்கள் தோறும் ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களையும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களையும் இனங்கண்டு அவர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், தனிநபர் இடைவெளியை பேணுமாறும், குழுக்களாக செயற்படுவதை நிறுத்துமாறும் முகக்கவசங்களை உரையாடல்களின் போது கட்டாயமாக பயன்படுத்துமாறும், பயணங்களின் போதும் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை பேணுமாறும், தும்மல் மற்றும் இருமலின் போது சரியான வழிமுறைகளை பின்பெற்றுமாறும் சுகாதார துறையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும் அவர் மேலும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments: