Home » » ஜனாதிபதி, பிரதமரின் வேலைத்திட்டங்களை பாராட்டியுள்ள கிழக்கு மாகாண தமிழர்கள்

ஜனாதிபதி, பிரதமரின் வேலைத்திட்டங்களை பாராட்டியுள்ள கிழக்கு மாகாண தமிழர்கள்

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் வேலைத்திட்டங்களை பாராட்டி தமது நன்றிகளை தெரிவித்துள்ள விதம் இம்முறை பொதுத் தேர்தல் முடிவுகள் மூலம் காண முடிந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

திருகோணலையில் உள்ள ஆளுநரின் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அன்றைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவளித்தனர்.

எனினும் மாகாணத்திற்கு எந்த பிரயோசனமும் இல்லை என்பதை இம்முறை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த பொதுத் தேர்தலை விட தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அதிகளவில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயல்கள் காரணமாக தமிழ் மக்கள் இம்முறை பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாகாண சபையில் அங்கம் வகித்த உறுப்பினர் உட்பட 15 பிரதிநிதிகள் இம்முறை பொதுஜன பெரமுனவை ஆதரித்தனர்.

உண்மையில் தமிழ் அரசியல்வாதிகள் செய்த வேலைகளால் தமிழ் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும் போது திருகோணமலை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவுக்கு 30 ஆயிரத்து 218 வாக்குகள் அதிகாமாக கிடைத்துள்ளன.

கடந்த முறையை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 12 ஆயிரத்து 324 வாக்குகள் குறைந்துள்ளன. அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் 36 ஆயிரத்து 678 வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்கு அதிகரித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 20 ஆயிரத்து 166 வாக்குகள் குறைந்துள்ளன. மட்டக்களப்பில் பொதுஜன பெரமுனவுக்கு ஆயிரத்து 192 வாக்குகள் அதிகரித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 47 ஆயிரத்து 785 வாக்குகள் குறைந்துள்ளன.

அப்பாவி மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் இருந்து கொண்டு சுகபோகங்களை அனுபவித்தனர்.

மாகாண மக்களை கண்டு கொள்ளவில்லை எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |