Home » » மட்டக்களப்பு எல்லைகளில் பறி போகும் நிலங்களும் மண்ணின் மைந்தர்களும்

மட்டக்களப்பு எல்லைகளில் பறி போகும் நிலங்களும் மண்ணின் மைந்தர்களும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களுள் ஒன்றான புல்லுமலை மற்றும் தாந்தாமலை, கச்சகொடி, சுவாமி மலை போன்ற பிரதேசங்களில் யாழ். எய்ட் என்ற தனியார் அமைப்பு, அங்குள்ள மக்களுக்கான இடர்காலப் பணிகளை முன்னெடுத்தபோது அவர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாது அல்லல்படுவதை அவதானிக்க முடிந்
தது. தமிழ் நிலம் பறிபோவதைத் தடுக்க வேண்டுமாயின் உண்மையிலேயே அவர்கள் வாழ்வாதாரம் மேம்பாடடைய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில், அந்தக் கிராம மக்கள் தங்களுடைய பூர்வீக நிலங்களைக் பறிகொடுத்திருக்கின்றனர். அதேபோல் மீண்டும் பறிபோய்விடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு பட்ட இடர்களை அனுபவித்துக் கொண்டும் அந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை விட அந்த மண்ணை இழக்காமல் காத்து வருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.

கிழக்கு மாகாணத்தில் பல பிரதேச இழப்புக்கள் ஏற்பட்டன. அந்த இழப்புக்கள் பெரும்பாலும் எல்லைக் கிராமங்களை மையப்படுத்தியே நடந்தேறின. இவ்வாறான தமிழ் நில அபகரிப்பினாலேயே தமிழர் தாயகம் சுருங்கிவருகிறது. எல்லைக் கிராமங்களை மையப்படுத்திய இது போன்ற நில அபகரிப்பானது ஒரு அரசியல் பின்னணியோடு அரங்கேற்றப்பட்டுவருவது அனைவரும் அறிந்த விடயம்.

அந்தவகையில் அந்த மக்கள் தங்களுடைய பிரதேசங்கள் பறிபோய்விடகூடாது என்பதற்காகப் பல இடர்களையும் அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள், தமிழர் தாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் இதனையே நாம் அடிக்கடி மேடையில் உச்சரித்து வருகிறோம். “தமிழர் தாயகத்தில் மீண்டும் ஒரு பிரதேச இழப்பு ஏற்படகூடாது என்பதற்காக இவர்கள் வாழ்க்கைப் போராட்டம் அளப்பரியது.


கச்சகொடி சுவாமி மலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் ஒர் எல்லைக்கிராமம். காடுகளுக்கு நடுவிலே அமைந்துள்ள கிராமம். முன்னர், அந்தப் பிரதேசத்தில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. தற்போது 100 க்கும் குறைவான குடும்பங்களே வாழ்ந்து வருகின்றன. யானைகளின் தொல்லை ஒரு புறம். யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் மின்சாரம் தாக்கிப் பறிபோகும் மனித உயிர்கள் மறு புறம்… இவ்வாறு பல இடர்கள் மத்தியில் அவர்கள் எல்லைக் காவலர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
அவ் மக்களுக்கான நிவாரணப் பணிகளை நாம் முன்னெடுத்துக் கொண்டு இருக்கும் போது கூட மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி 60 வயது குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்த பரிதாபமும் இடம்பெற்றுள்ளது என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகக் குறிப்பிடலாம்.
அத்துடன் அவர்களுக்கான சரியான போக்குவரத்திற்குரிய உட்கட்டுமான வசதிகள் எதுவும் இல்லை. வைத்தியவசதிகள், பாடசாலை வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட வழங்கப்படவில்லை. காட்டு விலங்குகளின் தொல்லைகளில் இருந்து எந்தவிதப் பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படாது, பல்வேறு பட்ட இடர்களுக்கு மத்தியில் தங்களுடைய பூர்வீக நிலத்தில் வாழவேண்டும் என்ற அடிப்படையிலேயே இவர்கள் வாழ்வது தெரிகிறது. அதே சமயம், இக் கிராமத்திற்கு சற்று தொலைவில் அம்பாறை மாவட்ட எல்லை கிராமமொன்றில் 400 சிங்களவர்கள் அங்குள்ள ஒரு பன்சலையின் அனுசரணையில் குடியமர்த்தப்பட்டதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள்.

அத்துடன் தங்களுடைய பிரதேசங்களுக்குள் யானை உள்நுழையாது இருக்க அமைக்கப்பட்ட மின்சார வேலியில் உள்ள மரக்கட்டைகளை மட்டும் யானைகள் தங்களுடைய கால்களால் தள்ளி விழுத்திவிட்டும் அல்லது வேறு மரங்களை கொண்டு வந்து மின்சார வேலிகளுக்கு மேல் போட்டு விட்டு தங்களுடைய கிராமங்களுக்குள் உள்நுழைவாதாகவும் கூறுகின்றார்கள். எனவே அந்த யானைகள் “எல்லை கடப்பதற்காகச் சரணயாலயங்களில் பயிற்றுவிக்கப்பட்ட யானைகளாக இருக்கலாம்” என்றும் மக்கள் சந்தேகப்படுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புல்லுமலை மற்றும் தாந்தாமலை கச்சகொடி சுவாமி மலை ஆகிய எல்லைக் கிராமங்களுக்கு பக்கத்தில் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்ற ;கிராமங்களான தெனியத்தகண்தய, மகாஓயா மற்றும் படியத்தலாவ போன்ற பிரதேசங்களில் 1901 ஆம் ஆண்டு 3302 பேராக இருந்த சிங்களவரின் தொகை 1981 இல் 26060 ஆக உயர்ந்ததும் அதே போல் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை அம்பாறை போன்ற பிரதேசங்களில் 1901 ஆம் ஆண்டு 616 பேர் ஆக இருந்த சிங்களவர் 1981 இல் 91925 ஆக அதிகரித்தும் காணப்பட்டன என்பது வரலாறுகள். அதன் தொடர்ச்சிதான் அம்பாறை மண் தமிழர்களிடம் இருந்து பறிபோனது.

இது போன்ற எல்லைக் கிராமங்கள் பறிபோகின்ற விடயங்களை அறிக்கைகளால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. தொடரும் இவ்வாறான பிரதேச இழப்புக்களை தடுக்கவும் முடியாது. மாறாக தங்களுடைய பூர்வீக நிலங்கள் பறிபோக கூடாது என்பதற்காகப் பல இடர்களையும், உயிராபத்துக்களையும் தாங்கிக் கொண்டு வாழும் இவர்கள் பக்கம் தமிழர்கள் அனைவரினது கவனமும் திரும்ப வேண்டும். இவர்களுக்கென ஒரு விசேட திட்டம் எம்மத்திலேயே உருவாக்கப்பட வேண்டும். நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் முதலில் அங்குள் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் புல்லுமலை மற்றும் தாந்தாமலை கச்சகொடி சுவாமி மலை போன்ற பிரதேச மக்களைப்போல் தமிழர் தாயகப்பிரதேசத்தில் எல்லை கிராமங்களில் வாழும் எமது மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான இடர்கால நிவாரணங்களையும் வாழ்வாதார மற்றும் வாழ்வியலுக்கான உதவிகளையும் தொடர்ந்து வழங்கி அந்த மக்களுக்கு கரம் கொடுத்து பலப்படுத்துவதன் மூலம் எமது எல்லைகளைப் பலப்படுத்தி பிரதேச இழப்புக்களைத் தடுக்க முடியும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |