கொரோனா தொற்று அச்சம் காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததனாலும் மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்து கல்வி நடவடிக்கையில் ஆர்வம் காட்டாமல் காணப்படுகின்றனர். இவர்களது உளவியல் ரீதியான இம்மாற்றத்தினை திருத்தி கல்வி நடவடிக்கையில் ஈடுபடச் செய்வதற்கான விளையாட்டுடன் கூடிய விசேட வரைதல் திட்டம் ஒன்றை மட்டக்களப்பு வன்னத்துப் பூச்சி சமாதானப் பூங்கா அமைப்பு தயார்படுத்தியுள்ளது.
இவ்விசேட செயற்றிட்டம் மட்டக்களப்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவர்களிடத்தில் செயற்படுத்தியபோது அவை வெற்றியளித்துள்ளதாகவும் இதனை இம்மாவட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களிடமும் செயற்படுத்துவதன் மூலம் அவர்களினதும் கற்றல் ஆர்வத்தினை மேம்படுத்த முடியுமென வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்கா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையிலான குழு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் இன்று(15) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெழிவு படுத்தியது.
மேலும் இச்செயற்றிட்டமானது 20 செயற்பாடுகளைக் கொண்டதாகவும் ஒவ்வொன்றும் மாணவர்கள் விரும்பக்கூடிய விளையாட்டுடன் கூடிய வரைதல் செயற்பாடாகக் காணப்படுவதாகவும் இவையனைத்தும் வன்னத்துப் பூச்சி சமாதானப் பூங்காவின் தயாரிப்புகள் எனவும் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தெரிவித்தார். இதனை விட இத்திட்டத்தினை மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கான நிதியினைப் பெற்றுத்தருமாறும் அவர் அரசாங்க அதிபரைக் கேட்டுக் கொண்டு இத்திட்ட மாதிரிகள் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிடம் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பின்போது வன்னத்துப் பூச்சி சமாதானப் பூங்கா அமைப்பின் திட்ட இணைப்பாளர், தோமஸ் சுரேஸ்குமார், திட்ட முகாமையாளர் ரீ. நகுலேஸ்வரன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
0 Comments