Home » » வெற்றி கொண்டாட்டத்தின் போது தொற்றாத கொரோனா முள்ளிவாய்க்காலில் மட்டும் தொற்றுமா?

வெற்றி கொண்டாட்டத்தின் போது தொற்றாத கொரோனா முள்ளிவாய்க்காலில் மட்டும் தொற்றுமா?

நூற்றுக்கணக்கானவர்களை அழைத்து இராணுவ வெற்றி தினத்தை கொண்டாடுகின்றபோது ஏற்படாத கொரோனா தொற்று முள்ளிவாய்க்காலில் இறந்த தம் உறவுகளை நினைத்து அவர்களுடைய, கவலைகளை சொல்லி அழுது அஞ்சலி செலுத்தும் போது மாத்திரம் தொற்றுமா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் மாமாங்கத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009 இறுதியுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் பதினோராம் ஆண்டு நினைவு தினம் வடக்கு கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் அனுஷ்டிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை தமிழ் மக்கள் அனுஷ்டிக்கக் கூடாது என்ற வகையில் அரசாங்கத்தினால் பல விதமான கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது.

மட்டக்களப்பில் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் கடந்த 18 ஆம் திகதி கொரொனா அச்சத்தின் காரணமாக இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நோக்கில் மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன், சுகாதார நடைமுறையோடு கூடிய நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம்.
இருந்தும் நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுக் கொண்டு, அந்நிகழ்வினை செய்யவிடாமல் எம்மை கைது செய்து ஏற்றிச் செல்வதற்கான வாகனங்களுடன் வந்து இடையூறு விளைவித்திருந்ததோடு, இறுதியில் நிகழ்வினையும் தடுத்தி நிறுத்தினர்.
அத்துடன் ஊடகவியலாளர்களுக்குக் கூட கருத்துக்களை வெளிக்கொணரும் உரிமை மறுக்கப்பட்டதுடன், மட்டக்களப்பிலும், வாகரையிலும் செய்திகளை சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும்.
கடந்த காலங்களில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்க சுதந்திரமான சூழ்நிலையொன்று காணப்பட்டது. இருந்தும் இப்போது இருக்கின்ற ஆட்சி மாற்றம் காரணமாக தமிழ் மக்கள் இறந்தவர்களைக் கூட நினைவுகூற முடியாத வகையில் இராணுவ கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இதற்கு தற்போது கொரொனா நோய்த் தொற்றினைக் காரணம் காட்டுகிறார்கள்.
இராணுவ வெற்றி தினத்தை கொண்டாடுவதற்கு நூற்றுக்கணக்கானவர்களை அழைத்து செல்கிறார்கள். இராணுவ வெற்றி தினத்தை கொண்டாடுகின்ற போது ஏற்படாத தொற்று முள்ளிவாய்க்காலில் இறந்த தம் உறவுகளை நினைத்து அவர்களுடைய, கவலைகளை சொல்லி அழுது அஞ்சலி செலுத்தும் போது மாத்திரம் தொற்றும் என எந்த ஒரு விஞ்ஞானியும் எதிர்வுகூறவில்லை.
அப்படியிருக்க இந்த கொரோனா நோயானது துக்கத்தை அனுஸ்டிக்கும் போது மாத்திரம் தொற்றாது, வெற்றிக் கொண்டாட்டத்தின் போதும் தொற்றும் என்பதை அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும்.
நோய்த் தொற்று பொதுவானது அது இனம் பார்த்துப் பரவக் கூடியதல்ல. இதனை முன்நிறுத்தி சந்தர்ப்பதினைப் பயன்படுத்திக் கொண்டு இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அடக்கு முறையைப் பிரயோகிப்பதோடு, இராணுவ அதிகாரிகளை அமைச்சுக்களின் செயலாளர்களாகவும், அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்து நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்க போன்றவர்களுக்கு பொதுமன்னிப்பும் வழங்கியுள்ளது.
எனவே அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் என்பது மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை ஒரு அவலத்தை நோக்கி கொண்டு செல்லும் செயற்பாடாகத்தான் இருக்கும் என்பதை இந்த இடத்தில் நான் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |