கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டவுடன் தனது மரணத்தை அறிவிக்க மருத்துவர்கள் தயாராகவே இருந்தனர் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தீவிர கண்காணிப்பு பிரிவில் தான் அனுமதிக்கப்பட்டது இக்கட்டான தருணம் என்பதில் ஐயமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிக்பை ஏற்படுத்தி வருகின்றது.
இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவிலும், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
முதலில் சுயதனிமையில் இருந்த அவர், பின்னர் நிலைமை மோசமடைந்தவுடன் லண்டனிலுள்ள செயின்ட் தோமஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அவர் கடந்த 12ம் திகதி சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில், தான் சிகிச்சை பெற்ற நாட்கள் குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.
“நான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கடினமான தருணம். அதனை எப்போதும் மறுக்க மாட்டேன். அப்போது நான் சுயநினைவுடன் இருக்கவில்லை.
எனினும் என்னை காப்பாற்ற தற்செயலான திட்டங்களே வைத்தியர்களிடம் இருந்தன. அவர்கள் எனக்கு ஒரு முகமுடியை பொருத்தி அதிகளவான ஒட்சிசனை ஏற்றினார்கள்.
எனது மூக்கு செயல்படும் தன்மையை இழந்தது. அதே நேரத்தில் நான் இறந்துவிட்டால் அதை எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்ற திட்டத்தையும் வைத்தியர்கள் தயார் செய்து வைத்தனர்.
இந்த நிலையிலிருந்து எப்படி வெளியேறப்போகின்றேன் என என்னை நானே கேட்டேன். ஒரு நாள் என் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இனியும் பிழைக்க போவதில்லை என நினைத்தேன்.
இந்நிலையில், வைத்தியர்களும், தாதியர்களும் என்னை மீட்க கடுமையாக போராடினார்கள். அவர்களின் அற்புதமான செயலால் தான் நான் மீண்டு வந்தேன்.
எனவே அவர்களுக்கு எப்போம் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: