Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்

அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு புகையிரத மற்றும் பேருந்து போக்குவரத்து சேவையில் இன்று முதல் மேலும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
அரச தனியார் நிறுவனங்களின் பணிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையிலேயே இத்தகைய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் அமைச்சர் மஹிந்தஅமரவீர தலைமையில் போக்குவரத்து அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணிகளுக்கு திரும்பும் போது அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை முறையாகப்பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
புகையிரத பயணிகளுக்கு இன்று முதல் பருவச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட உள்ளதுடன், புகையிரத பயணிகளுக்கான டிக்கெட்டுகளும் வழங்கப்படவுள்ளன. அதற்கிணங்க பயணிகள் தமது நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை சமர்ப்பித்து டிக்கெட்டுகளை பெற முடியும்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் அரச, தனியார் பேருந்து மற்றும் புகையிரதங்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றாடம் பணிகளுக்கு செல்லும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பயணிகள் போக்குவரத்துக்களில் முன்னுரிமை வழங்குவது என்றும் பொது மக்களுக்கான போக்குவரத்து சேவைகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சேவைகளை பெற்றுக் கொடுக்கவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கு மாத்திரம் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அநாவசியமான பயணங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை நேற்றைய தினம் வெளி பிரதேசங்களிலிருந்து கொழும்புக்கு வரும் அரச, தனியார் துறை ஊழியர்களுக்காக விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments