Home » » ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

வெளிநாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் அறிவித்த ஸ்ரீலங்காவிற்கான கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கான நிதி உதவிகள் இதுவரை வந்துசேரவில்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அரச உயரதிகாரிகளுக்காக 3000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகும் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கம் இன்றைய தினம் நிராகரித்துள்ளது.
கோவிட்-19 வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்காகவும் ஒழிப்பு பணிகளுக்காகவும் அமெரிக்கத் தூதரகம், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஸ்ரீலங்காவிற்கு வழங்கிய நிதி உதவிகளை அரசாங்கம் மறைத்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிரணியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மக்களுக்கான பணம் மக்களுக்குப் போய்சேராமல் அவை அரசியல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களிடம் சிக்கிவிட்டதாகவும், கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணிகள் இதனால் ஸ்தம்பிதமடைந்திருப்பதாகவும் எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் முற்பகலில் நடைபெற்றது.
இதன்போது, எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நிதிகள் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண,
உண்மையில் கோவிட்19 வைரஸ் குறித்து நிதியமைச்சு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றுவரை எந்தவொரு நாடுகளிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் ஒரு டொலராகிலும் ஸ்ரீலங்காவிற்குக் கிடைக்கவில்லை.
அதேபோல கடந்த நாட்களில் எதிரணியினரும் குற்றஞ்சாட்டியிருந்தனர். 3000 வாகனங்களை அரசாங்கம் கொள்வனவு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அது பொய்யான அறிவிப்பாகும்.
05 வருடங்களுக்கு எந்த வாகனமும் அரசியல்வாதிகளுக்கோ, அரச அதிகாரிகளுக்கோ வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது. மருந்துகள் வெளிநாட்டிலிருந்து கிடைத்திருக்கின்றன. அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |