Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நெஞ்சை கனக்க வைக்கும் கர்ப்பிணி தாதியின் மரணம்: கொரோனாவின் கோரத்தாண்டவம்

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திவரும் நிலையில் பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த இளம் கர்ப்பிணி தாதி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
லண்டன் மாநகரில் இருந்து 35 கி.மீ. வடக்கேயுள்ள லூட்டன் நகரில் உள்ள லூட்டன் அண்ட் டன்ஸ்டபிள் பல்கலைக்கழக வைத்தியசாலையில் கடந்த 5 ஆண்டுகளாக தாதியாக சேவை செய்து வந்தவர், 28 வயதேயான மேரி அகியேவா அகியா போங். இவர் ஆப்பிரிக்க நாடான கானாவை சேர்ந்தவர்.
ஆனாலும் தன் வாழ்வையே இங்கிலாந்தில் என்.எச்.எஸ். என்ற தேசிய சுகாதார பணிகள் துறைக்கு அர்ப்பணித்து விட்டார்.

கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் கூட இவர் அங்கு 12 ஆவது விடுதியில் இடைவிடாது தனது சேவையைத் தொடர்ந்து வந்தார். இந்த விடுதிதான், அந்த வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிற விடுதி. மார்ச் 12 ஆம் திகதிவரை அங்கு பணியில் தொடர்ந்து இருந்திருக்கிறார்.
இப்படி கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகளுக்காக சேவையாற்றிக் கொண்டிருந்த மேரியையும் கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டுள்ளது.
ஏப்ரல் 5 ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்றிக் கொண்டது மருத்துவ பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டது.
அடுத்த 2 நாளில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். முதலில் அவரது உடல்நிலை தேறுவது போல காணப்பட்டது. ஆனால் அடுத்த ஓரிரு நாளிலேயே அவரது நிலை மோசம் அடைந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமானது.
இந்நிலையில் வைத்தியர்கள் மேரிக்கு அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை முதலில் காப்பாற்றி விடுவோம் என கருதினர். அதையே செய்தனர். சிசேரியனில் மேரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மேரி என்றே பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
ஆனால் ஏசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை நாளில், மேரி உயிரை விட்டிருக்கிறார். இது அவரது குடும்பத்தினருக்கும், உடன் சேவையாற்றி வந்த வைத்தியர்களும் தாதியர்களும் தீராத சோகத்தை தந்திருக்கிறது.
இந்நிலையில் மேரியின் மரணம், சில கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
* மார்ச் 12 ஆம் திகதிவரை கொரோனா விடுதி பணியில் இருந்தபோதே மேரிக்கு கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டிருந்ததா?
* மேரி, சுய பாதுகாப்பு உடைகளையும், உபரணங்களையும் அணிந்து கொண்டு பணியாற்றினாரா? இந்தக் கேள்விக்கு முக்கிய காரணம், அந்த வைத்தியசாலையில் முன் வரிசை வீரர்களுக்கான கவச உடைகள், பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முக கவசங்களே ரேஷன் அடிப்படையில்தான் வழங்கப்பட்டு வந்ததாகவும் வெளியாகி உள்ள தகவல்கள்தான் இந்த கேள்வியை எழுப்ப வைத்துள்ளன.
மேரியின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒன்று என்று ஆணித்தரமாக சொல்கிறது, கர்ப்பிணிகளின் நலனுக்காக செயல்படுகிற அமைப்பின் நிறுவனர் ஜோலி பிரர்லே.
4 வார கர்ப்பத்துக்கு உட்பட்டவர்கள் தாதி பணியில் தொடரலாம் என்கிற விதியை மாற்ற வேண்டும் என மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரிக்கு கோரிக்கை வலுத்து இருக்கிறது.
கொரோனா வைரசுக்கு இதுவரை இங்கிலாந்தின் தேசிய சுகாதார பணிகள் துறையில் பணியாற்றுகிற வைத்தியர்கள், தாதியர்கள், சார்பு மருத்துவ பணியாளர்கள் என 45 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments