Home » » இம்மாதம் ஊரடங்குச் சட்டம் தளர்வு குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து

இம்மாதம் ஊரடங்குச் சட்டம் தளர்வு குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து

இம்மாத இறுதியில் ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்துவது பற்றி கவனம் செலுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போதுள்ளதை போன்றே எதிர்வரும் நாட்களில் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை குறைவடையும் என்று எதிர்பார்க்கின்றோம்.

எனினும் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எவ்வாறு அதனை பரப்பியுள்ளனர் என்பதன் அடிப்படையிலேயே இதனைத் தீர்மானிக்க முடியும்.

தற்போது இனங்காணப்படுபவர்கள் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களாவர். அவர்களுக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதை எமக்கு தெளிவாகக் கூற முடியும். இந்நிலையில் வைரஸ் சமூகத்திற்குள் பரவும் நிலைக்கு நாம் செல்லவில்லை.

தற்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் மற்றும் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்படும் பிரதேசங்களிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. காரணம் இவ்வாறான பகுதிகளிலேயே பெருமளவான நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

சனிக்கிழமை புனாணை தனிமைப்படுத்தல் நிலையத்தில் மாத்திரம் ஒரே நாளில் 208 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதுவே ஒரு தளத்தில் அதிகளவு பரிசோதனை செய்யப்பட்ட முதல் தடவையாகும். இதே போன்று கொழும்பில் 63 பேரும், அம்பாறையில் நால்வரும் கம்பஹாவில் 6 பேரும், யாழிலில் 10 பேரும், இரத்தினபுரியில் 58 பேரும், பதுளையில் 83 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் பெறுபேறு சாதகமானதாக அமைந்தால் அதனை எண்ணி மகிழ்ச்சியடைவோம்.

காரணம் இவர்கள் மூலமாகவே அடுத்தடுத்த நோயாளர்கள் இனங்காணப்படுவர். எனவே இவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்லுமானால் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை பூச்சியமாகும்.

இந்த வைரஸ் துரிதமாக பரவக் கூடியது என்பதே பாதகமானதாகும். இதன் காரணமாகவே சமூக இடைவெளிளைக் கடைபிடிப்பது அத்தியாவசியமாகும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

அதற்காகவே தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே நிலைமையை நாம் தொடர்ச்சியாக பின்பற்றினால் இம்மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தக் கூடியதாக இருக்கும்“ என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |