Home » » மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்கள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் வெளியீடு-மீறினால் உரிமம் இரத்து!

மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்கள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் வெளியீடு-மீறினால் உரிமம் இரத்து!

மட்டக்களப்பு உட்பட நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. மட்டக்களப்பில் நாளை திறக்கப்படும் வர்த்தக நிலையங்கள் குறித்தும், அவை பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிகாரி, மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் ,மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



வர்த்தக சங்கத்தினருடனான இக் கலந்துரையாடலில் வர்த்தக நிலையங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில்  17.04.2020 அன்று நடைபெற்ற மாவட்ட பணிக்குழுக் கூட்டத்தில் உணவகங்கள் (Hotel & Restaurant), சிற்றூண்டிச்சாலைகள், அழகுசாதன நிலையம் (Beauty Parlor), மதுபான விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வியாபார நிலையங்களையும் 20.04.2020 அன்று ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் திறப்பதற்கு கீழ்வரும் நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1.வாடிக்கையாளர்களை கட்டாயம் 1  மீற்றர் தூர இடைவெளியில் பேணுவது, அதற்குரிய வகையில் அமைப்பு மற்றும் குறியீடுகளை ஏற்படுத்துதல்.

2.வாடிக்கையாளர்கள் கைகழுவுவதற்கு சவர்க்காரம் மற்றும் தண்ணீர் வசதி அல்லது கைகளை Sanitizer மூலம் சுத்தப்படுத்துவதற்கான வசதியை வழங்குவது.

3.வர்த்தக நிலைய சகல பணியாளர்களும் அவசியம் முகக்கவசம் அணிந்திருப்பது, மிகக்குறைந்த தேவையான பணியாளர்களை மாத்திரம் பணிக்கு அமர்த்துவது.

4.இருமல், தடுமல், காய்ச்சல், சுவாசப்பிரச்சினை உள்ளவர்களை பணிக்கு அமர்த்தாதிருப்பது.

5.தேவையற்றவகையில் வாடிக்கையாளர் வர்த்தக நிலையத்தின் பொருட்கள் மற்றும் மேற்பரப்புக்களை தொடுவதை தவிர்பதற்கான அறிவுறுத்தலை வழங்குதல்.

6.வர்த்தக நிலையத்தின் சகல பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுநோய் தவிர்ப்பதற்காக ஆலோசனைகளையும், முகக்கவசம், Sanitizer
 ஆகியவற்றைப் தேவையான அளவு பெற்றுக் கொடுத்தல்.

7.வியாபார நிலையத்தின்  மேற்பரப்புக்கள், தரைகள், கதவுகள், சுவர்கள், Switch கைபிடி மற்றும் அடிக்கடி  கைகளால் தொடும் இடங்களை கிருமி நீக்கி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்தல்.

8.வியாபார நிறுவனங்களின் இடப்பரப்புக்கேற்ப ஆகக்கூடியது 3-5 நுகர்வோர்களை மாத்திரம் ஒரே நேரத்தில் அனுமதிப்பது.

9.வர்த்தக நிலையத்தினுள் குளிரூட்டிகளை நிறுத்தி சூரிய வெளிச்சம், காற்று உட்புகக் கூடியவாறு வைத்திருத்தல்.

10.கொரோனா தொற்றுநோயை தவிர்க்கக்கூடிய வகையில் செய்திகளைக் கொண்ட பதாதைகளை காட்சிப்படுத்தல்.

இவைகளுடன் சுகாதாரத் துறையினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை தொடர்ச்சியாக பேனுதல்.

மேற்கூறிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத வியாபார நிலையங்களின் அனுமதி மாநகர சபையினால் இரத்துச் செய்யப்படும் என மாநகர சபையால் வர்த்தக நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நடைமுறைகளை பேணாத வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை முதல்வர்.தி.சரவணபவன் தனது ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |