Home » » நாடளாவிய ரீதியில் ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலைத் தாக்குதல்! இன்றுவரை வெளியாகாத விபரங்கள்

நாடளாவிய ரீதியில் ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலைத் தாக்குதல்! இன்றுவரை வெளியாகாத விபரங்கள்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களின் முழுமையான விபரம் இதுவரை வெளியாகாதிருப்பது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பௌத்த மக்களின் பெருந் தலைமைகளில் ஒன்றான மல்வத்துப்பீடம் தெரிவித்துள்ளது.
இந்த தீவிரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று மல்வத்துப்பீட துணைநாயக்கர் நியங்கொட விஜித்தசிறி தேரர் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமாகிய ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட பல இடங்களிலும் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் பலர் பலியாகியதோடு வெளிநாட்டவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டு நாளை மறுதினத்துடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது. மேலும் இந்த தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புபட்ட பலரும் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவருடம் ஆகின்ற நிலையில், இதுவரை அதன் சூத்திரதாரிகள் யார் என்பதை கண்டுபிடிக்காதிருப்பது கவலையை தருவதாக மல்வத்துப்பீடம் தெரிவிக்கின்றது. மல்வத்துப்பீடத்தின் துணைநாயக்கராகிய நியங்கொட விஜித்தசிறி தேரர், இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளிட்டபோது இதனைக் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் வெளியிட்ட அவர்,
உயிர்த்த ஞாயிறு தினம் எனக்கூறும் போத கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலே நினைவுக்கு வருகிறது. அன்றைய தினம் காலை கிறிஸ்தவர்கள் தங்களது ஆராதனைக்கு ஆயத்தமாகிய போது இந்த பயங்கரமான தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் சிறுவர், இளைஞர், முதியவர் என 350 பேர்வரை பலியாகியதோடு பலரும் காயமடைந்தனர். இன்றும் பலர் நோயாளர்களாக இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்தத் தீவிரவாத தாக்குதல் குறித்த அடிப்படை விடயங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் என பல விடயங்கள் குறித்து இதுவரையும் தெளிவான தகவல் வெளியாகியிருக்காதிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த நமது சொந்தங்களை இன்றைய நாட்களில் நினைவுகூருவது நமது கடமையாகும். அன்று முதல் இன்றுவரை அங்கவீனர்களாக உள்ளவர்கள் நிரந்தரமாக குணமடைய வேண்டும் என்று பிரார்தனை செய்வதும் எமது கடமை. இந்த சந்தர்ப்பத்தில் பௌத்தர்கள் என்ற வகையில் இவற்றை நாங்கள் செய்ய வேண்டும்.
பௌத்த தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களிடையே அனைவருக்கும் நல்லதை செய்ய வேண்டும் என்பதாகும். ஆகவே இந்த தீவிரவாத தாக்குதலின் சுபாவத்தை நினைவு படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்காக நினைவுகூருதல் மற்றும் உபகாரணங்களை செய்தல் என்பவற்றையும் பேராயர் கர்தினால் கூறியிருந்தார். தீவிரவாத தாக்குதலானது கிறிஸ்தவ தேவாலயங்கள் மட்டுமன்றி ஏனைய பகுதிகளிலும் நடத்தப்பட்ட போது, கிறிஸ்தவர்கள் மிகவும் பக்குவமாக நடந்துகொண்மை மிகப்பெரிய முன்னுதாரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |