மூன்று மாதங்களுக்கும் மேலாக கொரோனாவின் கோரப் பிடியிலிருந்த சீன தேசம் தற்போது தன்னுடைய நற்பு நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை செய்யத் தொடங்கியிருக்கிறது.
சீனாவின் வுகானில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை வாட்டியெடுத்துக் கொண்டிருக்கிறது. வைரஸ் பாதிப்பு எட்டு லட்சத்தை நெருங்குகிறது. உலக மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கிறார்கள்.
இந்நிலைமை நீடித்தால் இன்னும் சிறிது காலத்தில் உலகம் பாரியதொரு பொருளாதார சிக்கலை எதிர் கொள்ள நேரிடும் என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கிடையில், சில நாடுகளில் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அண்மையில், சில ஆசிய நாடுகளுக்கு சீனாவின் பல்வேறு சமூக வட்டாரங்கள் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கின.
சீனாவின் யுன்னான் மாநில அரசு மாலத்தீவுக்கு வழங்கிய உதவிப் பொருட்கள் மார்ச் நேற்று முன்தினம் அந்நாட்டைச் சென்றடைந்ததாக சீனாவின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதேபோன்று, மங்கோலியாவுக்குச் சீன அரசு வழங்கிய உதவிப் பொருட்கள் 28ஆம் திகதி உலான்பாடர் நகரைச் சென்றடைந்தது. இதுகுறித்து அந்நாட்டின் துணைத் தலைமையமைச்சர் உல்ஸீசைகான் என்க்துவ்ஷின் தகவல் வெளியிடுகையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையை இந்தப் பொருட்கள் ஊட்டியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் பல்வேறு தரப்புகள் வழங்கிய 3 டன் எடையுடைய உதவிப் பொருட்கள் 29ஆம் திகதி நேபாளத்தைச் சென்றடைந்தன. அதேநாள், சீனாவின் அலிபாபா குழுமத்தின் பொது நல நிதியமும், ஜாக் மா பொது நல நிதியமும் வழங்கிய மருத்துவப் பொருட்கள் வங்காளத்தேச அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவலை வங்காளதேசம் சமாளிப்பதற்கு இப்பொருட்கள் உதவி அளிக்கும் என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தவிரவும், சீன மருத்துவ நிபுணர்கள் லாவோஸ் மற்றும் பாகிஸ்தானைச் சென்றடைந்து மருத்துவ உதவிகளை அளித்துள்ளனர்.
அதேபோன்று சீனாவிடமிருந்து ஸ்ரீலங்காவிற்கும் இரண்டு கட்டங்களாக மருத்துவ உதவிப்பொருட்கள் வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










0 Comments