Home » » கொரோனாவால் அமெரிக்காவிற்கு ஏற்படவிருக்கும் பேராபத்து! வெள்ளை மாளிகை விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனாவால் அமெரிக்காவிற்கு ஏற்படவிருக்கும் பேராபத்து! வெள்ளை மாளிகை விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையான தாக்கத்தினை செலுத்துக் கொண்டிருக்கையில், அடுத்த 2 வாரங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்தால் அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் மரணிக்கலாம் என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
சீனாவின் வுகானில் உருப்பெற்ற கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தற்போதுவரை 723,434 பேர் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 33,997 பேர் வரை உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும் 151,809 பேர் வரை குணமடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில் ஐரோப்பாவில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கியிருக்கிறது. ஐரோப்பாவில் மட்டும் 21 ஆயிரம் பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
இதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 142,735 பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,488 பேர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஒருங்கிணைப்பாளரும் அந்நாட்டின் மிகப்பெரும் மருத்துவ நிபுணருமான அந்தோனி ஃபாஸி வெள்ளை மாளிகையில் இது தொடர்பாகக் கூறியபோது, “நாம் இந்த வைரஸின் வீரியத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நிச்சயம் இது நடக்கும், 2 வாரங்களில் 2 லட்சம் அமெரிக்கர்கள் பலியாவார்கள். நாம் இந்தத் துயரம் நடக்காமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் எதிர்வினை ஒருங்கிணைப்பாளர் டொக்டர் டெபோரா பர்க்ஸ் பேசிய போது, 1 லட்சம்-2 லட்சம் மரணங்கள் என்பது சமூக விலகல் எந்த அளவில் இருந்து வருகிறது என்பதைப் பொறுத்த முற்கோளாகும் என்றார். ஆனால் இந்த மாதிரி கணிப்புகள் தவறாகக் கூடப் போகலாம், என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
எவ்வாறாயினும், இந்த மாதிரி கணிப்புகளைக் கண்டு அமெரிக்கர்கள் அதிகம் கவலையடைய வேண்டியதில்லை என்று மருத்துவர் ஃபாஸி ஆறுதலான வார்த்தைகளை கூறியிருக்கிறார். மாதிரிக்கணிப்புகள் என்பது ஒரு முற்கோள் அல்லது கணிப்பு மட்டுமே என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பேசிய போது, சமூக விலகலைக் கடைப்பிடிக்கவில்லையெனில் 2.2 மில்லியன் மக்கள் பலியாவார்கள், இதனை ஒரு லட்சமாகக் குறைத்தாலும் கூட இதுவே பயங்கரமான எண்ணிக்கைதான், ஆனாலும் இப்படிக்குறைத்தால் நாம் நல்ல பணியை மேற்கொண்டிருக்கிறோம் என்று பொருள்.
இதனையடுத்து அமெரிக்காவில் சமூக விலகல் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் திகதி நாம் இதிலிருந்து மீளும் பாதைக்குத் திரும்புவோம் என்றும் அவர் நம்பிக்கையாக பேசியுள்ளார்.
கொரோனாவின் மையப்புள்ளியாக நியூயார்க் நகரம் மாறியிருக்கிறது. நியூயார்க் மாகாணம், நியு ஜெர்சி, கனெக்டிகட் ஆகிய இடங்களில் இருப்பவர்கள் அநாவசியமாக பயணங்களை மேற்கொள்ள 14 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் இந்த வைரஸ் வறண்ட புல்லில் தீ பரவுவது போல் பரவுகிறது என்று ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோ கவலை வெளியிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |