Home » » சம்பந்தனை கூட்டமைப்பில் இணைத்த ரூபன் திருமலையில் மீன் சின்னத்தில் போட்டி.

சம்பந்தனை கூட்டமைப்பில் இணைத்த ரூபன் திருமலையில் மீன் சின்னத்தில் போட்டி.திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்டத்தினதும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்குகிறார். 

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஊடாக இவருக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.  இறுதி யுத்தம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி  பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.1985 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இணைத்துக்கொண்ட ரூபன் 24 வருடங்கள் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்துள்ளார். விடுதலைப் புலிகளால் 1987 இல் இடைக்கால நிர்வாக சபைக்குப் பெயரிடப்பட்டிருந்தோரில் இவரும் ஒருவர். பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் பங்குகொண்டவர். 

இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கும் சமயத்தில் திருமலை மாவட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி மற்றும் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த இவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மோசமாகக் காயமடைந்தார். 13.06.1990 அன்று தம்பலகாமத்துக்கும் பாலம் போட்டாறுக்கும் இடையிலுள்ள ஜெயபுரம் என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் மாவட்ட மட்டத்தில் திருமலையில் நிகழ்ந்த படையினருடனான சந்திப்பில் கலந்து கொண்டார் . குச்சவெளிப் பகுதியில் 1995 ஜனவரியில் நிகழ்ந்த இச் சந்திப்பில் படையினர் தரப்பில் பின்னாளில் வடமாகாண ஆளுநராக இருந்த அப்போதைய பிரிக்கேடியர் சந்திரசிறி மற்றும் பிரிகேடியர் ஓம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.   

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும் விளங்கியவர். 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருமலையில் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து இவரை மீண்டும் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமித்தார் தலைவர். 

இழக்கப்பட்ட தமிழரின் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் வகையில் வாக்களிப்பின் அவசியத்தை திருமலை மக்களுக்கு உணர்த்துவதே இவருக்கிடப்பட்ட முக்கிய பணி. இதனால் 2001 இல் இரா.சம்பந்தனை வரவழைத்து கட்டைபறிச்சானில் சந்தித்தார் இவர். அரசியல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2000 ஆம் ஆண்டு தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்ற தமிழரின் கட்சி 2001 இல் 59,000 வாக்குகள் பெற்று மீண்டும் பிரதிநிதித்துவம் பெற்றது. 

35,000 வாக்குகளைப் பெற்ற சம்பந்தன் ஐயா மீண்டும் பாராளுமன்றம் சென்றார். தேசியப் பட்டியல் உறுப்பினரான மு.சிவசிதம்பரத்தின் மறைவைத் தொடர்ந்து 2001 தேர்தலில் 28,000 வாக்குகள் பெற்றிருந்த துரைரெட்ணசிங்கம் மாஸ்டருக்கு இப்பதவியை வழங்குமாறு இவர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாகத் தலைமைச் செயலகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். இறம்பைக்குளம், பூசா, கொழும்பு 2 ஆம் மாடி என இரு வருட  தடுப்பின் பின் விடுதலையானார்.
இவரது சகோதரர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளிகளாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தேர்தல் களத்தில் ரூபன் களம் இறங்கியுள்ளமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்ற அதேவேளை முன்னாள் போராளிகள்இமாவீரர் குடும்பங்கள்இபுலம்பெயர் தேசத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் இவருக்கான ஆதரவு தளம் அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |