மக்கள் ஒன்று கூடும் இடங்களில் நபர்களுக்கிடையில் சுமார் ஒரு மிற்றர் இடைவெளியை பேணுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பஸ் மற்றும் புகையிரத சேவைகள் நடைமுறையில் உள்ள சந்தர்ப்பங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் பிரயாணிகள் அவற்றுக்கு உரிய எண்ணிக்கையை பார்க்கிலும் அரைவாசியாக இருக்க வேண்டும்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை தட்டுப்பாடின்றி நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அசௌகரியத்திற்குள்ளாகாத வகையில் பொருட்களை விநியோகிக்குமாறு சதொச உள்ளிட்ட விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 20 வெள்ளி முதல் 27 வெள்ளி வரை அரச மற்றும் தனியார் துறைகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக நேற்று (19) பிரகடனப்படுத்தப்பட்டது. அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தமக்கு மிகவும் பொருத்தமான தொலைத்தொடர்பாடல் முறைமையொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளின் போது மக்கள் குழுக்களாக ஒன்று கூடுவதை மட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதித்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்புடன் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு உதவும் பல்வேறு நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெப்ரவரி 26ம் திகதி கொரோனா ஒழிப்பு விசேட செயலணி தாபிக்கப்பட்டது. அத்தகையதொரு செயலணி தாபிக்கப்பட்ட முதலாவது நாடு இலங்கையாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயலணி உறுப்பினர்களுடனும் வைரஸ் ஒழிப்புடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடனும் தினமும் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறார். நோய் தொற்று பரவியதை தொடர்ந்து சீனாவின் வுஹான் நகரில் சிக்குண்டிருந்த இலங்கை மாணவர்களும் ஏனைய இலங்கையர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அவ்வாறு வருகை தந்த மாணவர்கள் நோய் தடுப்பு காப்புக்கு உட்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது 17 நோய்த்தடுப்புக் காப்பு மத்திய நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. அவை தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் அனைவரும் நோய்த்தடுப்புக் காப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு தேவையான வசதிகளுடன் 19 வைத்தியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
கொவிட் -19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் தாபிக்கப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு தேசிய நெறிப்படுத்தல் மத்திய நிலையம் இலக்கம் 1090 ஸ்ரீ ஜயவர்த்தனபுர, இராஜகிரிய என்ற முகவரியில் இருந்து இயங்கி வருகின்றது. பொதுமக்கள் சுகாதார சேவைகள் மற்றும் ஏனைய சேவைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்புடன் நிவாரண மற்றும் முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணி அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
உருவாகியுள்ள பிரச்சினையை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று செயலணியுடன் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
நாட்டில் உருவாகியுள்ள நிலைமை பாரதூரமானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லையென்ற போதிலும் அனைத்து விடயங்களையும் நடைமுறை சாத்தியமான முறையில் ஆராய்ந்து பொருளாதார மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பில்லாத வகையிலேயே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசியல் நோக்கங்களை கொண்டவர்களும் சமூக விரோதிகளும் தற்போதைய சுகாதார பிரச்சினையை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் வதந்திகளின் ஊடாக போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிவேக நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது என்று இன்று பரவிய செய்தி பொய்யானதாகும். அதிவேக நெடுஞ்சாலை திறந்துள்ளது என்றும் அதில் பயணிக்க ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் அவசியம் என்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
0 Comments