Home » » மஹிந்த - ரணில் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஞ்சன்! நாடாளுமன்றில் திணறிய எம்.பிக்கள்

மஹிந்த - ரணில் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஞ்சன்! நாடாளுமன்றில் திணறிய எம்.பிக்கள்


இதுவரை வெளிவராத, அரசாங்கத்தினால் மறைக்கப்படுகின்ற குரல் பதிவுகள் என்னிடம் இருக்கின்றன. அவற்றை நான் இன்று சபைப்படுத்துகின்றேன். என்னிடம் பேசிய நீதிபதிகள், அரச தலைவர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், அவர்களுடைய மனைவிமார், பிள்ளைகள் ஆகியோரது குரல் பதிவுகளும் உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


சுனாமி, மோசடி, அவன்காட் மோசடி, மத்திய வங்கி மோசடி என்பவற்றில் ஆதாரம் கோரினார்கள். ஆகவேதான் நான் அனைத்து ஆதாரங்களையும் திரட்டிவைத்துக்கொண்டேன்.
அந்த குற்றவாளியை, திருடரை விடுதலை செய்யுங்கள் என்று எந்த இடத்திலும் நான் அழுத்தம் கொடுக்கவில்லை. ஏன் பிடித்து சிறைவைக்கவில்லை என்றே கேட்டுள்ளேன்.
இவற்றை நிரூபிக்க என்னிடம் குரல் பதிவு உட்பட காணொளிகளும் உள்ளன. கடந்த பாரத லக்ஷ்மன் பிரேச்சந்திரவின் படுகொலையில் அவரது சாரதியை 70 இலட்சம் ரூபா விலைக்கு வாங்கி வழக்கை திசைதிருப்ப முயற்சித்தமை குறித்து ஹிருணிக்கா எனக்கு தகவல் வழங்கினார்.
வழக்கில் இப்போது சந்தேக நபர்கள் சாட்சிகளை விலைக்கு வாங்குகிறார்கள். அதேபோலவே ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வழக்கில் எவ்.சி.ஐ.டி முன்னாள் பொறுப்பதிகாரி ரவி வைத்தியலங்கார, பலவீனமான வழக்கை தாக்கல் செய்ய பணம் கேட்டுள்ளார்.
இடையே அந்த வழக்கு கைவிடப்பட்டுவிடும். அவ்வாறே சாட்சியாளர் நீதிமன்றில் எவ்.சி.ஐ.டியினர் அழுத்தம் கொடுத்ததாக சாட்சியளித்ததால் வழக்கு பின்வாங்கியது. கடந்த காலங்களில் இவ்வாறே இடம்பெற்றன.
திருடர்களும் திருடர்களைப் பிடிக்கிறவர்களும் ஒப்பந்தங்களை செய்துகொண்டு இடையே வழக்கை திசைதிருப்பினார்கள். ஆகவே நீதிபதி, வழக்கு சட்டத்தரணி, சாட்சியாளர்கள், முறைப்பாட்டாளர்கள் அனைவரது குரல் பதிவுகளையும் சேமித்தேன்.
திருடர்களைப் பிடிப்பதாககக் கூறி வந்த நல்லாட்சி அரசாங்கம், முதல் நாள் இரவில் விசேட ஹெலிகொப்டர் மூலம் திருடர்கள் தப்பிச்செல்ல வசதிசெய்துகொடுத்தது.
மத்திய வங்கி மோசடியில் அலோசியஸின் குரல் பதிவும் என்னிடம் உள்ளது. எனக்கு பணம் கொடுக்க முயற்சித்த குரலும் என்னிடமிருக்கிறது.
நீதிபதி சரத் அம்பேப்பிட்டிய சர்ச்சைக்குரிய வழக்கில் தீர்ப்பு அளித்ததினால் பொட்ட நவ்பர் தனது அடியாளை வைத்து நீதிபதியை அவருடைய இல்லத்திற்கு முன் சுட்டுக்கொன்றபோது சந்தேக நபர் அங்கு இட்ட வாந்தியின் மாதிரியை வைத்தே அவரைக் கைது செய்தார்கள்.
அந்த அச்சம் இன்று உள்ள போதைப்பொருள் கடத்தர்காரர்களினால் முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்கவுக்கு இருந்தது. அவருடைய பிள்ளைகளுக்கு கல்லூரிக்குச் செல்லும் வழியில் எசிட் வீச்சு மேற்கொள்வதாக மிரட்டல் வந்ததாக என்னிடம் சொன்னார்.
நான் விரைந்து பூஜித் ஜயசுந்தரவுக்கும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தொலைபேசியில் உரையாடினேன். அந்தப் பதிவுகளும் என்னிடம் உள்ளன.
பொலிஸ் பாதுகாப்பை நீதிபதியின் பிள்ளைக்குப் பெற்றுக்கொடுத்தேன். அது பிழையா? இதில் எந்த அழுத்தமும் நான் கொடுக்கவில்லை. சிலர் இங்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.
சில பௌத்த பிக்குமார்களும் குரல் கொடுக்கிறார்கள். இவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்பது மனசாட்சிக்குத் தெரியும். பாணந்துறையிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தவர் இன்று எவ்வாறு கோடீஸ்வரர் ஆகினார்? இது போதைப்பொருள் பணம். அவரிடம் பணம் பெற்ற தேரர்களும், அரசியல்வாதிகளும் இருக்கின்றனர். அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.
நான் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாகவே குரல் கொடுப்பவன். மத்திய கிழக்கில் பாதிக்கப்பட்ட அக்கா, தங்கைகளுக்காக நான் குரல் கொடுத்தபோது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர்கள் என்னைக் கொலை செய்ய முயற்சித்தார்கள்.
குரலற்றவர்களுக்காக நான் நின்றவன். அண்மையில் சிறிய பிக்கு மாணவனை அழைத்துக்கொண்டு அவருடைய தந்தை என்னை சந்தித்தார். அந்த சிறுவன் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளார். இதில் சம்பந்தமாக வேண்டாம் என எனது பணியாளர்களும் கூறினார்கள்.
ஏன் மகாநாயக்க தேரர்களிடம் இதுபற்றி முறையிடவில்லை என நான் கேட்டபோது, அவர்களிடமிருந்தும் தவறு ஏற்பட்டுள்ளது என்று சிறுவனின் தந்தை பதிலளித்தார். ஆகவேதான் கழுத்து அறுந்தாலும் நான் தைரியமாக ஈடுபட்டேன்.
நான் வாக்குகளுக்காக இவற்றைப் பேசவில்லை. வரும் தேர்தலில் நான் சுயாதீனமாகவே போட்டியிடுவேன். பொய் செய்திருந்தால் பிணையின்றி என்னை வீட்டிற்கு அனுப்புங்கள். உண்மை சொல்லி சிறையிலிருப்பேன். வெளியில் இருக்கமாட்டேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொக்கேன் போதைப்பொருள் பாவிப்பதாக நான் கூறினேன். பிரபல நடிகை பியுமி ஹன்சமாலிதான் இரவு களியாட்ட விடுதிகளில் கொக்கேன் போதைப்பொருள் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைத் தந்தார்.
மெக்டோனால்ட் பையில் போதைப்பொருள் கொண்டுவந்தது? யார் பணம் கொடுத்தது? இவற்றை கண்டுபிடிக்க பல உபாயங்களைக் கடைபிடிக்க வேண்டும். நான் செய்த முறை குறித்து சான்றிதழ் யாரிடமிருந்தும் தேவையில்லை. நான் செய்தது சரி. உயிரைப் பணயம் வைத்தே செய்தேன்.
நானும் அனைவரையும் அனுசரித்து நடந்திருக்கலாம். ஆனால் அதற்காகவா மக்கள் எம்மை பிரதிநிதிகளாக அனுப்பிவைத்துள்ளனர்? பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளியாகிய குரல் பதிவுகள் குறித்து விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைப்பதாகக் கூறியிருக்கின்றார்.
இரட்டை சலியூட் செய்கின்றேன், முடிந்தால் ஆணைக்குழுவை அமைக்குமாறு அரசாங்கத்திற்கு நான் சவால் விடுகின்றேன். ஆணைக்குழுவை அமைத்தால் கோப்புக்களை எடுத்துவருவேன். அவர் பேசிய குரல் பதிவுகளும் என்னிடம் இருக்கின்றன.
2005ஆம் ஆண்டில் வன் சொட் என்ற திரைப்பட விவகார வழக்கிலிருந்து விடுதலையாகிய பின் தொடர்புகொண்ட மஹிந்த ராஜபக்ச, ரஞ்ஜன் இப்போது நீ வெளியே இருப்பது என்னால்தான், ஆனால் நன்றிக்கடன் உனக்கு இல்லையே என்று கூறிய குரல் பதிவும் என்னிடம் உள்ளது.
அரச தலைவர் ஒருவர். அப்போது சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்திற்கு எதிராக போராடியதால் எனது வன் சொட் திரைப்படத்தை பார்க்க அவருக்கு விருப்பம் இருந்தது. அந்த படத்தை சினிசிட்டி திரைப்பட மண்டபத்தில் என்னுடன் மஹிந்த ராஜபக்சவும், முத்துஹெட்டிகமவும், சங்கீத்தாவின் கணவர் பிரியந்த காரியப்பெருமவும் சேர்ந்து பார்த்தார்கள்.
அந்தப் படம் பார்த்து வெளியே வந்தபோதுதான் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டார். என்னிடம் அனைத்து பதிவுகளும் இருக்கின்றன. என்னைக் கொலை செய்தாலும் பிரச்சினையில்லை, தேவையான குரல் பதிவுகளை வெளிநாடுகளில் பாதுகாப்பு பெட்டகங்களில் சேமித்து வைத்துள்ளேன்.
அரசாங்கம் திருடர்களைப் பிடிக்க வந்தது. ஆனால் திருடர்கள் அரசாங்கத்தைப் பிடித்துக்கொண்டார்கள். எவ்வாறு பலர் இங்கு கோடீஸ்வரர்கள் ஆனார்கள்? யார் போதைப்பொருள் கடத்தலை செய்தது என்பதை இங்குள்ள அனைவருக்கும் தெரியும்.
இன்று சாட்சிகள் உள்ளன. ஷாணி அபேசேகரவிடம் பேசியதாகக் கூறுகிறார்கள். ஆம், விவாதத்திற்கு செல்லமுன் நேவி சம்பத் கடத்தல் என பல்வேறு தகவல்களையும் அவரிடம் பெற்றுக்கொள்வேன்.
எனது மாமனார் விஜயகுமாரதுங்க உண்மையை சொன்னதால் பொல்ஹேன்கொடவில் படுகொலை செய்யப்பட்டார். எனது மாமனாரான மருத்துவர் காலோ பொன்சேகா தனது சம்பளம் அதிகம் என அவற்றில் ஒருதொகையை மருத்துவச் சபைக்கு செலுத்தினார்.
அப்படிப்பட்ட பரம்பரையிலிருந்து வந்த நானும் இப்போது செய்கின்றேன். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவில் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. நான் அதனை நிராகரித்தேன். வருகைக்கான கட்டணம் பெறுவதில்லை.
சொந்த வீடு இல்லை. இப்படியிருக்கையில் ஏன் என்னை மட்டந்தட்டுகிறார்கள்? இன்று திருடர்களைப் பற்றி பேசுகிறவர்களே மிகப்பெரிய திருடர். ஆகவே ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றேன்.
ரிஷானா நப்பீக் சவூதி அரேபியாவில் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டபோது அவரை இரண்டு வாரங்களில் காப்பாற்றுவதாக டிலான் பெரேரா சபையில் தெரிவித்திருந்தார். மஹிந்த ராஜபக்ச என்னிடம் தொடர்புகொண்டு என்னைத் திட்டினார்.
நீ மட்டுமா வேலைசெய்கிறாய்? 8 பில்லியன் டொலர்கள் நாட்டிற்கு பணிப்பெண்களினால் வருகிறது என்று என்னை திட்டினார். அந்த குரல் பதிவும் இருக்கிறது. அவர் வாசுதேவ மூலம் பத்மினி ரணவக்கவை தொடர்புகொண்டு என்னை காப்பாற்றியதையும் அவர் கூறியிருந்தார்.
அதனையும் நான் சபையில் சமர்பிக்கின்றேன். சில அமைச்சர்களின் மனைவிமார் என்னுடன் தொலைபேசியில் கலந்துரையாடியிருக்கின்றார்கள். தனது கணவர் இன்னுமொரு அமைச்சரது மனைவியை திருமணம் செய்ததாகவும், பிரதமர் ஆகின்ற யோகம் இருப்பதாக ஜோதிடர்கள் வழங்கிய ஆலோசனையின்படி அவ்வாறு செய்ததாக மனைவிமார் என்னிடம் கூறினார்கள்.
நான் எனது சட்டையில் இரகசிய கமரா ஒன்றை பொருத்தி அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றபோது உள்ளே நட்சத்திர விடுதிகளைப் போல சிறிய குளிக்கும் தொட்டியும், வெளியே பெரிய தொட்டியும் இருந்தது. இந்த நாடாளுமன்றில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் 100 பேர் உள்ளனர். கிரிக்கெட் சபை மோசடி பற்றிய தகவல் என்னிடம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |