Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பற்றைக்காடாகி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் இடமாக மாறும் கல்முனை மாநகரம்!



(பாறுக் ஷிஹான்)
கல்முனை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளின் இருமருங்கிலும் காடுமண்டிக்காணப்படுவதனால் கால்வாயில் கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசும் இடமாகவும் மற்றும் நுளம்பு பெருகும் இடமாகவும் மாறிவருகின்றது.

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட நகரப்பகுதிகளை அண்டிய மக்கள் கூடும் இடங்களை அண்மித்த இடங்களில் இத்தகைய துர்நாற்றம் வீசும் நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக கல்முனை மாநகர சபையில் இருந்து 200 மீற்றர் சுற்றுவட்டத்தில் குறித்த இடங்கள் அமைந்துள்ளதுடன் அதிகளவு காடு மண்டிக்காணப்படுகிறது.

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக குறித்த காடுகள் வளர்ந்து காணப்படுவதுடன் இடையிடையே சிரமதானம் எனும் பெயரில் கண்துடைப்பிற்காக துப்பரவும் செய்யப்படுகிறது.

குறிப்பாக கல்முனை இலங்கை வங்கி கல்முனை பிரதான பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள கால்வாயிலுள்ள நீர் வடிந்தோடாமைக்கு பிரதான காரணம் இதுவாகும்.

இந்த நிலைமை குறித்து அப்பகுதியிலுள்ள வட்டார உறுப்பினர்களிடம் அறிவித்திருந்தபோதும் அதனை அவர்கள் கவனிக்காதுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வீடுகள் மற்றும் வளவுகளில் நீர் தேங்கிநின்றால் டெங்கு நுளம்புகள் விருத்தியடைகின்றன என சட்ட நடவடிக்கை எடுக்கும் மாநகரசபை பொது இடங்களில் நீர் தேங்கியுள்ளமை தொடர்பில் எத்தகைய அவதானிப்புக்களும் இன்றி செயற்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கல்முனை நகரத்தை பொறுத்தவரையில் வெளிமாவட்ட மக்கள் மட்டுமன்றி அப்பகுதியை சேர்ந்தவர்களும் வந்து செல்லும் இடமாகவுள்ளமையினால் குறித்த பகுதிகளை துப்புரவு செய்யவும் அதனை நிரந்தரப் புனரமைப்பு செய்யவேண்டும் எனவும் மக்கள் கேரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments