- செ.துஜியந்தன் -
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) எதிர்வரும் நாட்களில் விடுதலை செய்யப்படலாம் என்ற எதிர்பார்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சி ஆதரவாளர்கள் உள்ளனர்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை செய்யப்ட்ட வழக்கு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கடந்த நான்கு அரை வருடங்களுக்கு மேலாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் காரணமாக இதுவரை குற்றச்சாட்டு நிருபிக்கப்படாது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எதிர்வரும் நாட்களில் பிணையிலாவது விடுவிக்கப்டலாம் என்ற எதிர்பார்ப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் 22ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால் பிள்ளையானின் விடுதலையை மட்டக்களப்பு மக்கள் எதிர்பார்த்துள்ளனர். கிழக்குமாகாணத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு அடுத்த நிலையில் தமிழ் மக்களின் ஆதவைப்பெற்ற கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உள்ளது. கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் கூட்டமைப்பிற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய கட்சியாகவும் பிள்ளையானின் கட்சியுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் பொதுத்தேர்தலுக்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் விடுதலையும் பேசுபொருளாகியுள்ளது. கடந்த காலங்களில் கிழக்குமாகாண முதலமைச்சராக இருந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையான் இங்குள்ள மக்களுக்கு பல்வேறு அபிவிருத்திப்பணிகளை கனிசமாக முன்னெடுத்துள்ளார். இவருக்கு பின்னர் முதலமைச்சராகிய எவரும் பிள்ளையான் முன்னெடுத்த அபிவிருத்திகளைப்போன்று சிறப்புடன் முன்னெடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிள்ளையான்விடுதலை செய்யப்பட்டால் கிழக்குமாகாணத்தில் அரசியல் ரீதியில் ஓர் மாற்றம் ஏற்படும் என கட்சி ஆதரவாளர்களும், மக்களும் நம்பிக்கையில் உள்ளனர்.
0 comments: