Home » » ஆசிரியையை மயங்கி விழவைத்த அதிபரின் அநாகரிகப் பேச்சு! நடந்தது என்ன?

ஆசிரியையை மயங்கி விழவைத்த அதிபரின் அநாகரிகப் பேச்சு! நடந்தது என்ன?

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியை ஒருவரை நேற்று தரக்குறைவான வார்த்தைகளால் தூற்றியமையினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற ஆசிரியை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிபர், கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் குறித்த ஆசிரியையை பேசியுள்ளார்.
இதன் காரணமாக அதிபரின் இவ்வாறான வார்த்தை பிரயோகத்தை சற்றும் எதிர்பாராத ஆசிரியை மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த ஆசிரியை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இச் சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் குறித்த பாடசாலையின் அதிபர் மீது சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தெரியவருகின்றது.
இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலையின் அதிபரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,
”எமது பாடசாலையில் உப அதிபராக கடமையாற்றும் ஒரு பெண் உப அதிபரிடம் சில பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் பணிகளை சீராக செய்ய மாட்டார் என்பது எனக்கு தெரியும். இதனால் அதனை மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. அத்துடன் இரண்டாம் ஆண்டில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் இடமாற்றத்தில் சென்றுவிட்டார். அதனால் குறித்த உப அதிபரை அந்த வகுப்பில் கற்பிற்குமாறு தெரிவித்தேன்.” என்றார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட ஆசிரியையான பிரதி அதிபர் சம்பவம் தொடர்பில் கூறும்போது,
”எனக்கு அதிபரினால் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதுடன் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். தகாத வார்த்தைகளினால் பேசி என்னை வெளியேறுமாறும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளேன். அதிபரினால் எனக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகள் குறித்து வலய கல்விப்பணிப்பாளருக்கு முற்கூட்டியே முறையிட்டிருந்தேன்.” என்றார்.
வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் திருமதி சுரேந்திரன் அன்னமலர் இதுகுறித்து தெரிவிக்கும்போது,
”ஆசிரியர் முறையிட்டுள்ளது குறித்து அதிபர், ஆசிரியரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்கள். குறித்த சம்பவம் தொடர்பாக அதிபரிடம் அறிக்கை கோரியிருந்தேன். இதுவரையில் வழங்கப்படவில்லை.” என்று மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |