மட்டக்களப்பு மாநகர சபையின் 19 ஆவது (4 ஆவது விஷேட) அமர்வில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியோடு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுகாக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (17.05.2019) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் தொழில் ரீதியாக செயற்பட்டு வருகின்ற முச்சக்கர வண்டிகளை ஒழுங்கமைத்து, பொது மக்களுக்கு பாதுகாப்பான சேவையினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட முச்சக்கர வண்டி தரிப்பிடங்களை கட்டுப்பாடுத்தல் மற்றும் ஒழுங்கு படுத்தலுக்கான உப விதியானது 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி தொழில் ரீதியாக செயற்பட்டு வருகின்ற சகல முச்சக்கர வண்டிகளும் மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யும் வகையில் முச்சக்கர வண்டிகளையும், அவற்றுக்கான தரிப்பிடங்களையும் ஒழுங்குபடுத்தும் நோக்கோடு மேற்படி துணை விதியானது இன்றைய சபை அமர்வில் முன்வைக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியோடு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுகாக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முச்சக்கர வண்டி விடயத்தில், சபையின் வாத பிரதி வாதங்களையடுத்து வாக்கெடுப்புக்கு நாடாத்தப்பட்டு இவ் உப விதியானது 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 17 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக முன்னனியின் உறுப்பினர் ஒருவரும், சுயேற்சைக்குழுவின் உறுப்பினர் ஒருவருமாக 25 உறுப்பினர்கள் ஆதரவாகவும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இருவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக எட்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததோடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தார்.
0 comments: