Home » » அமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு!

அமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்கான ஆவணங்களை தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் எனது அமெரிக்க குடியுரிமை நீக்கப்படும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட நான் தயாராகி விட்டேன். மஹிந்த ராஜபக்ஸவின் ஆசீர்வாதம் ஏற்கனவே கிடைத்துள்ளது. அத்துடன், தற்போதைய ஜனாதிபதியின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
எங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை நம்பாமல் எமக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்களிடம் நான் கோருகின்றேன். எனக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில், இந்நாட்டின் தமிழ் பேசும் மக்கள் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பேன்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான செயற்பாடுகள் மற்றும் நகர்வுகள் பெரும்பாலும் பூர்த்தியாகிவிட்டன. யுத்தத்திற்கு தலைமை வகித்ததால் என்னைப்பற்றி தவறான மற்றும் பொய்யான பிரசாரங்களை தமிழ் மக்கள் மத்தியில் சிலர் முன்னெடுத்துள்ளனர். எனினும் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன மக்களையும் மீட்பதற்காகவே நான் போராடினேன்“ என தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |