நேற்று இரவு கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த ஒருவரை அப்பகுதி இளைஞர்கள் மடக்கி பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பிச்சென்று அப்பகுதியிலுள்ள இராணுவ முகாமில் புகுந்ததாகவும், அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இன்று(செவ்வாய்கிழமை) குருக்கள்மடம் செல்லக்கதிர்காமம் ஆலய முன்றிலில் களுவாஞ்சிகுடி பொலிஸார், அப்பகுதி இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் கிராம முக்கிஸ்தர்கள், இளைஞர்கள் இதுதொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 14ஆம் திகதி இரண்டு வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பெண்களின் கழுத்தில் இருந்த மாலைகளை பறித்துச்சென்றதையடுத்து இரவு வேளைகளில் குருக்கள்மடம் இளைஞர்கள் கண்காணிப்பு கடமைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வீடொன்றிற்குள் புகுந்து பெண்னொருவரின் மாலையை அபகரிக்க ஒருவர் முயன்றபோது அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் குறித்த நபரை பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பியோடியுள்ளார்.
அவரை இளைஞர்கள் துரத்திச்சென்றபோது குருக்கள் மடத்தில் உள்ள இராணுவ முகாமுக்குள் குறித்த நபர் சென்றதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்த இளைஞர்கள் குறித்த நபரை கைதுசெய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததுடன் அது தொடர்பான காணொளியையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேநேரம் தமது முகாமுக்குள் அவ்வாறான நபர்கள் யாரும் வரவில்லையென தெரிவித்த அப்பகுதி இராணுவத்தினர் இது தொடர்பான முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.
0 Comments