நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமை அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமானது என்றும் குற்றம்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, பொதுத் தேர்தலை ரத்துச் செய்ய வேண்டிய நிலைக்கு மைத்ரிபால தள்ளப்படுவார் என்றும் அறிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவு தொடர்பில் அலரி மாளிகையில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளது.
அதேவேளை அரசியல் சானத்தை முற்றிலும் மீறி செயற்பட்டுவரும் மைத்ரி – மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகத்தின் கடுமையான தடைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அவசரமாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன,
”நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதாக சூளுரைத்துவந்த நிலையிலேயே தற்போது நாடாளுமன்றத்தை கலைத்துள்ள சிறிலங்கா அரச தலைவர் தற்போது சட்டவிரோதமான பொதுத் தேர்தலுக்கு சென்றிருக்கின்றார்.
இது முற்றிலும் சடடவிரோதமான செயல், முதலில் புதிய பிரதமர் ஒருவரை நியமித்து நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த மைத்ரிபால சிறிசேன அதில் தோல்வியடைந்தார். தற்போது அவர் இரண்டாவது தோல்வியை சந்திக்கப்போகின்றார். அதாவது சிறிலங்காவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த அரச தலைவர் மீண்டும் அதனை இரத்துச் செய்த வரலாறு ஒன்று அடுத்துவரும் தினங்களில் பதியப்படவுள்ளது.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழித்து, நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக எம்முடன் இணைந்துகொண்ட தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அவருக்கு இல்லாத அதிகாரங்களையே பயன்படுத்தி வரும் துர்பாக்கிய நிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது.
அதுவும் அவருக்கு ஆட்சியை கைப்பற்ற உதவிய அவரது நண்பர்களை பழிவாங்குவதற்காக அவரது எதிரிகளை இணைத்துக்கொண்டு செயற்படும் மிகவும் கொடூரமான துரோகத்தையும் அவர் செய்து வருகின்றார். இவ்வாறான துரோகத்தை செய்த ஜனாதிபதி ஒருவரை நாம் உலகில் எந்தவொரு இடத்திலும் காணவில்லை. குறிப்பாக கொடுங்கோல் ஆட்சியாளர்கள் கூட அவர்களது நண்பர்களை இந்த அளவிற்கு பழிவாங்கவில்லை.
எனினும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை எதிர்நோக்க நாம் தயாராகவே இருக்கின்றோம். அது மாத்திரமன்றிஅறிவிக்கப்பட்ட பொதுத் தேர்தலை இரத்துச் செய்யவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.
அதேவேளை எந்தவொரு தேர்தலுக்கும் முகம்கொடுப்பதற்காக நாம் பலமான ஜனநாயகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கவுள்ளோம். அந்த பரந்துபட்ட ஜனநாயக கூட்டணியின் ஊடாகவே தேர்தல்களை எதிர்கொள்வோம். அதன் ஊடாக ஜனாதிபதியின் உத்தரவுகளையும் தோற்கடிப்பதோடு தேர்தல்களிலும் அவரை தோற்கடிப்போம்.
எம்முடன் நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரண்டுள்ளனர். அதேவேளை இன்னொரு விடையத்தையும் இந்த இடத்தில் கூறியாக வேண்டும். குறிப்பாக பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள காலத்திற்குள் ஜனாதிபதி மைத்ரி மற்றும் அவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேசம் அனைத்துத் தடைகளையும் விதிக்கப்போகின்றன. இதனை தடுக்க முடியாது. இன்றுவரை சட்டவிரோத பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையை எந்தவொரு உலக நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனால் இந்த அரசாங்கம் மீது மோசமான தடைகள் வரலாம். அது மாத்திரமன்றி இந்த அரசாங்கத்தை கொண்டு நடத்த தேவையான நிதியும் ஒதுக்கப்படவில்லை அதுமாத்திரமன்றி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் மைத்ரி – மஹிந்த தரப்பால் அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது. எமது அரசாங்கம் ஒதுக்கிக்கொண்ட நிதிகள் மாத்திரமே இருக்கின்றது. ஆனால் அவற்றை இவர்கள் பயன்படுத்த முடியாது. அதனால் பெரும் நெருக்கடியை இந்த தரப்பு சந்திக்கவிருக்கின்றது.
மைத்ரிபால சிறிசேன போன்ற ஒருவருடன் இணைந்து ஜனநாயகத்தை நிலைநாட்ட முன்வந்தது தொடர்பில் நாம் கவலையடைகின்றோம். அதேவேளை எமது போராட்டத்தை நாம் கைவழிடப்போவதிலலை. எமது போராட்டத்தை நாம் தொடர்ந்து ஜனநாயக விரோத செயல்களை தோற்கடிப்போம் என்பதை இந்த ஜனாதிபதிக்கு மிகவும் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.” என்று ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
0 Comments