Advertisement

Responsive Advertisement

பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் மைத்திரி? தீவிர ஏற்பாடுகள் மும்முரம்!

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் மத்தியில் பிரதமர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்கிரமசிங்க களமிறக்கப்படவுள்ளதாக கொழும்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது.
இந்த யோசனையை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறி லங்கா அரச தலைவரால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த பொதுத்தேர்தலுக்கு எதிர்வரும் சனவரி மாதம் 5ஆம் நாள் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தமது தேர்தல் செயற்பாடுகளுக்காக மும்முரமான முறையில் தயராகிவருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறாவது எதிர்வரும் தேர்தலின்மூலம் ஆட்சியைக் கைப்பற்றிவிடவேண்டும் என்ற கடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது.
இந்த நிலையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான மக்கள் ஆணை பெறக்கூடிய ஒருவரை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
இதன்படியே ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்கிரமசிங்க களமிறக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் அரசியலில் வெளிப்படையாக களமிறங்காத ஒரு நபராக இருந்துவரும் மைத்திரி விக்கிரமசிங்க இம்முறை தேர்தலில் களமிறக்கப்பட்டால் கணிசமானளவு மக்கள் ஆணையினைப் பெறமுடியும் என ஐ.தே.கவின் மூத்த ஊறுப்பினர்கள் கருதுகின்றனர்.
அத்துடன் களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைப் பேராசிரியராக மைத்திரி விக்கிரமசிங்க விளங்குவதால் கல்விப்புலம் சார்ந்த ஆதரவும் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசியல் சார்பில்லாத ஒருவராக இருந்து பின்னர் பண்டார நாயக்கவால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு உலகின் முதல் பெண் பிரதார் எனும் பலம்பொருந்திய பதவிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments