Home » » யாழில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி

யாழில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் மீள் செயற்படுத்தல் நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் இடம்பெற்றபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் கடற்றொழில் துறையை புத்தெழுச்சி பெறச்செய்யும் நோக்கில் ”மைத்ரி ஆட்சி – பேண்தகு யுகம்” செயற்திட்டத்தின் கீழ் 400 மில்லியன் ரூபா செலவில் இந்த புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், இந்த மீன்பிடித் துறைமுகத்தையண்டிய தமது சொந்த நிலங்களை இழந்துள்ள மக்களின் காணிகளை மீளப்பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுதல் நாட்டு மக்களின் பொறுப்பாகவும் குறிக்கோளாகவும் காணப்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து, தேசிய சொத்துக்களை சிதைத்து, நாட்டினை பின்னோக்கி கொண்டு சென்ற கொடூர பயங்கரவாதம் எவ்வகையிலும் மீண்டும் உருவாக இடமளிக்க முடியாதெனவும் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் தமது பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றி சர்வதேசத்தினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்தும் நாட்டை விடுவித்துக்கொள்ள தற்போதைய அரசாங்கம் கடந்த மூன்று வருட காலத்தினுள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்கு நாட்டிற்கு கிடைத்துள்ள சுதந்திரத்தினை உரியவாறு சகல மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தியை மீண்டும் மேற்கொண்டு அம்மக்களின் அபிவிருத்திக்கான உரிமைகளை வென்றெடுக்கவும் அரசாங்கம் முக்கியமாக கவனம் செலுத்தி வருகின்றதென தெரிவித்தார்.

இந்த நோக்கிலேயே விசேட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்ச்சியாக ஒன்றுகூடி முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்கின்றனர் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். எந்தவொரு ஜனாதிபதியும் தம்மைப்போன்று வட மாகாணத்திற்கு அடிக்கடி விஜயம் செய்யவில்லை என்பதை இதன்போது நினைவூட்டிய ஜனாதிபதி அவர்கள், வடக்கு மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களுக்கான தேவைகளை வழங்க வேண்டிய தனது பொறுப்பினை உரியவாறு நிறைவேற்றவே தாம் அவ்வாறு அடிக்கடி விஜயம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் வட மாகாணம் உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் பாரிய சவாலாக மாறியுள்ள போதைப்பொருள் பிரச்சினை தொடர்பிலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சிறைச்சாலைகளில் இருந்தவாறே போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுதல் உள்ளிட்ட சட்டதிட்டங்கள் எதுவித தயக்கமும் இன்றி அமுல்படுத்தப்படுமென தெரிவித்தார்.

நினைவுப் பலகையை திறந்துவைத்து மயிலிட்டி மீன் துறைமுகத்தின் புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

மயிலிட்டி மீனவ சமூகத்தினர் தமது நன்றியை தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கியதுடன், ஜனாதிபதி அவர்களும் அவர்களோடு சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி, பிரதி அமைச்சர்கள் அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா, டி சித்தார்த்தன் உள்ளிட்ட வட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் பெருந்திரளான பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். -(3)39589350_10160615656560567_4036046614194814976_n 39811503_10160615669215567_8591056484702355456_n
தொடர்ந்தும் பாதுகாப்பு படையினரின் பொறுப்பில் காணப்படும் மயிலிட்டி பாடசாலை மற்றும் அதனையண்டிய காணிகளை எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலிருந்த வட பிரதேச காணிகளில் 88 சதவீதமான காணிகள் தற்போது அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள 12 சதவீதமும் வெகுவிரைவில் அம்மக்களிடம் கையளிக்கப்பட வேண்டுமென்ற தெளிவான கொள்கையை அரசாங்கம் கொண்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |