Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிக்க முடியுமா?


எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அந்தப் பிரேரணை வெற்றிபெற்றாலும் அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்க முடியாது. ஏனெனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்குவதற்கான வழிமுறைகள் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து நாட்டையும் அரசியலையும் மக்களையும் குழப்பி பிரேரணையிலும் மண்கவ்விய மகிந்த ஆதரவு பொது எதிரணியினர், அடுத்தகட்டமாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து அவரின் பதவியை பிடுங்கப் போவதாக பரபரப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
பதிலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முடிந்தால் பிடுங்கிப் பாருங்கள் தக்க நேரத்தில் சரியான பதிலடி தருவேன் எனக் கூறி சவால் விடுத்துள்ளதால் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இவ்வாறான ஒரு பரபரப்பான சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் இரா . சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முடியுமா? கொண்டு வந்து வாக்கெடுப்புக்கு விட்டு அதில் வெற்றி பெற்றாலும் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து அகற்ற முடியுமா? சம்பந்தன் தன் சவாலில் வெற்றி பெறுவாரா என்பது தொடர்பில் பார்ப்போம்.
இலங்கையில் 1947 ஆம் ஆண்டு முதல் இற்றை வரையான சனப் பிரதிநிதிகள் சபை மற்றும் பாராளுமன்றத்தில்  19 தடவை 14 பேர் எதிர்க்கட்சித் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். இவர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் ஆகிய இருவர் மட்டுமே தமிழர்கள். இந்த 19 தடவைகளிலான எதிர்க்கட்சித் தலைவர்களாக என்.எம்.பெரேரா 2 தடவைகளும் சிறிமாவோ பண்டாரநாயக்க இரண்டு தடவைகளும் ரணில் விக்கிரமசிங்க 4 தடவைகளும் பதவி வகித்துள்ளனர்.
இந்த 14 எதிர்க்கட்சித் தலைவர்களிலுள்ள இரு தமிழர்களில் ஒருவரான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக 1981 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது அடுத்த தமிழரான இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
1981 ஆம் ஆண்டு அமிர்தலிங்கத்திற்கு எதிராக அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.க.வே நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தது. இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அப்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இன்று எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள சம்பந்தனுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அணியினரே நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரவுள்ள நிலையில், அதனை ஐ.தே.க.வினர் எதிர்க்கின்றனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தை ஐ.தே.க. ஏற்கவில்லை. இப்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சம்பந்தனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கவில்லை. அப்போது அரசுக்கு எதிராக செயற்பட்டதனால் அமிர்தலிங்கத்திற்கு எதிராக ஐ.தே.க. அரசு நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தது. இன்று அரசுக்கு ஆதரவாக செயற்படுவதால் சம்பந்தனுக்கு எதிராக எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருகின்றது. சம்பந்தன் அரசின் நம்பிக்கைக்குரியவராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் மட்டுமே செயற்படுகின்றார். எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளில் அவர் கவனம் செலுத்துவதில்லை என்பதே பொது எதிரணியின் குற்றச்சாட்டு. இதுதான் வேடிக்கை.
இந்த நிலையில் , சம்பந்தனுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெறுமா? சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிக்கப்படுமா? ஐ.தே.க. , ஜே.வி.பி., ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் இப்பிரேரணைக்கு ஆதரவு வழங்குமா? எதிர்க்குமா ? என்ற பலவித கேள்விகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இதில் உண்மை என்னவென்றால், எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அந்தப் பிரேரணை வெற்றிபெற்றாலும் அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்க முடியாது என்பதே. ஏனெனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்குவதற்கான வழிமுறைகள் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. சபாநாயகரினால் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்க முடியும். இது தெரியாமலேயே பல அரசியல்வாதிகளும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் சம்பந்தனின் பதவியை பறிக்கப் போவதாக சூளுரைத்து வருகின்றனர்.
அதிலும் மகிந்த ஆதரவு அணியிலுள்ள சிரேஷ்ட எம்.பி.க்களான பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல , டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட பலரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் சம்பந்தனை வீட்டுக்கு அனுப்புவோம் எனக் கூறிவருகின்றனர். இவர்கள் அரசியலமைப்பு பற்றி தெரிந்தும் தெரியாமல் பேசுகின்றார்களா? அல்லது உண்மையில் தெரியாமல்தான் பேசுகின்றார்களா? என்பது அவர்களுக்கே வெளிச்சம். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் பதில் சவால் விடுத்து வருகின்றார். ஆனால், சம்பந்தன் அரசியலமைப்பு சட்டத்தை கரைத்துக் குடித்தவர். அவருக்கு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் தன்னை அசைக்கமுடியாது என்பது நன்கு தெரியும். அதனை வெளிக்காட்டாமலேயே அவர் முடிந்தால் கொண்டுவந்து பாருங்கள் தக்க நேரத்தில் நான் பதிலடி தருவேன் எனக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அவரின் பதவியை பறிக்க முடியாது என்பதற்கு 1977 முதல் 83 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சிறந்த உதாரணமாகும்.
1977 காலப்பகுதியில் ஐ.தே.க. அரசே இருந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம் இருந்தார். அப்போதைய சபையில் 168 உறுப்பினர்களே இருந்தனர். இதில் ஐ.தே.க. தரப்பில் 144 பேரும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 18 பேரும் ஏனையவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்தவர்களாகவும் இருந்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐ.தே.க. அரசாங்கமே முன்வைத்தது. 36 எம்.பி.க்களின் கையொப்பத்துடன், அப்போதைய அரசிலிருந்த நெவில் பெர்னாண்டோவினால், அப்போது சபாநாயகராக இருந்த பாக்கீர் மாக்காரிடம் அப்பிரேரணை 1981 ஜூலை மாதம் கையளிக்கப்பட்டது. இந்தப் பிரேரணை மீதான விவாதம் 1981 ஜூலை 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. இந்தப் பிரேரணை தொடர்பில் அமிர்தலிங்கம் தன்னிலை விளக்கம் அளிக்கக்கூட அரச தரப்பினர் இடம்கொடுக்கவில்லை. தன்னிலை விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு அமிர்தலிங்கம் விடுத்த கோரிக்கை சபாநாயகர் பாக்கீர் மாக்காரினால் நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னர் அச்சபையில் மிக மோசமான இனவாதத்தை அரசாங்கத் தரப்பு வெளிப்படுத்தியது. இவ்வாறான நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த 121 பேர் வாக்களித்தனர். பிரேரணைக்கு எதிராக செல்டன் ரணராஜா என்பவர் மட்டுமே வாக்களித்திருந்தார். அவர் நேர்மையானவர். அதனால் துணிச்சலாக எதிர்த்து வாக்களித்தார். இதனால் ஐ.தே.க.வினர் அவரை துரோகி என்றனர். ரணராஜா என்ற பெயரை நடராஜா என மாற்றி தூற்றினர். ஜே.ஆர். ஜெயவர்தன அவரை மிக மோசமாக திட்டினார். எனினும் என் மனச்சாட்சிப்படியே வாக்களித்தேன் என செல்டன் ரணராஜா கூறினார்.
அப்போது அமைச்சராக இருந்த தொண்டமான் இந்த வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை. அதேவேளை பிரேரணையை எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பேசமுயன்ற போது அதற்கு சபாநாயகரினால் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அவர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அமைச்சர் தொண்டமான் விவாதத்தில் அமிர்தலிங்கத்திற்கு ஆதரவாக பேசிவிட்டு வாக்களிப்பில் கலந்துகொள்ளாது அவரும் வெளியேறிச் சென்றார். தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது உரிமைகள் மறுக்கப்பட்டதாகக் கூறி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது சபையிலிருந்து வெளியேறிச் சென்றனர். இதனால் ஐ.தே.க.வினர் மட்டுமே சபையில் நிறைந்திருந்தனர். அவர்கள் மட்டுமே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் மீதான இந்தப் பிரேரணை 120 மேலதிக வாக்குகளால் வெற்றியடைந்தபோதும், அந்த வெற்றியை நடைமுறைப்படுத்த அரசியலமைப்பு சட்டத்தில் எந்த சட்ட வாய்ப்புகளும் இருக்கவில்லை. அமிர்தலிங்கம் தொடர்ந்தும் 1983 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 24 ஆம் திகதி வரை எதிர்க்கட்சித் தலைவராகவே இருந்தார். 1983 ஜூலை கலவரத்தின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 18 பேரும் பாராளுமன்றம் செல்வதை தவிர்த்தனர். இதனால் இறுதியில் அரசியலமைப்பின் உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு அமிர்தலிங்கம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாமையினால் 24.10.1983 அன்று அவர் தனது பதவியை இழந்தார். அன்றைய தினமே தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் அவர் இழந்தார்.
ஆகவே, சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்போவதாகவும் அதைக் கொண்டுவந்து அவரை பதவி நீக்கப் போவதாகவும் மகிந்த ஆதரவு பொது எதிரணியினர் கூறிவருவது அரசியல் ஆதாயம் கருதிய ஒரு விடயமாகவே உள்ளது. எனினும், மகிந்த அணியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போது அந்த அணியின் தலைவரும் பழுத்த அரசியல்வாதியுமான தினேஷ் குணவர்தன மட்டும் உண்மையை பகிரங்கமாக கூறியுள்ளார். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர முடியாததனால் அவர் பதவி விலக்கப்பட வேண்டுமென்பதே தமது அணியின் உறுதியான நிலைப்பாடென தினேஷ் குணவர்தன எம்.பி. கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரை பதவி விலக்கக்கூடிய அதிகாரம் சபாநாயகருக்கே உண்டு . எனவே, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தின் தற்கால நிகழ்வுகளை நன்கு புரிந்து கொண்டவராக தார்மீகத்துடன் தனது பதவியை இராஜினாமா செய்வதே அவருக்கு நல்லது. இல்லையேல் அவர் வெட்கப்படும் நிலையே ஏற்படும். எனவே பாராளுமன்றத்தை கேலிக்குரிய இடமாக்காமல் தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள சம்பந்தனை உடனடியாக பதவி விலக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தினேஷ் குணவர்தன எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முடியாது. அவ்வாறு கொண்டுவருவது பாராளுமன்ற சம்பிரதாயத்தில் இல்லை. இந்நிலையில் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை எமது அணியினர் கொண்டுவரப்போவதாக சிலர் குழம்பிப்போயுள்ளனர். அவ்வாறு கொண்டுவர முடியாது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தினேஷ் குணவர்தன எச்சரித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 54 உறுப்பினர்களை நாம் கொண்டுள்ளோம். எமக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வரும் பலமுண்டு. 16 உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு எதிர்க்கட்சியாக அங்கம் வகிக்க முடியும். சம்பந்தன் ஏனைய நாடுகளிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று நாட்டு மக்களின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தாது எப்போதும் அரசாங்கத்திற்கு சார்பாக நடந்து கொள்வது பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் சபாநாயகர் உறுதியான நிலைப்பாட்டிற்கு வராவிட்டால், நாம் போராட்டங்களை முன்னெடுத்தேனும் சம்பந்தனை பதவி விலக்குவோம் என்றும் தினேஷ் குணவர்தன எச்சரித்துள்ளார்.
எனவே, சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்போவதாக மகிந்த ஆதரவு பொது எதிரணியினரே பரபரப்புகளை கிளப்பியுள்ள நிலையில், அந்த அணித் தலைவரே அவ்வாறு ஒன்றைக் கொண்டுவர முடியாதென கூறியுள்ளமை மூலம் உண்மையை விளங்கிக் கொள்ள முடியும். அவ்வாறு சிலவேளைகளில் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டதைப் போல் சம்பந்தனுக்கு எதிராக கொண்டுவந்தாலும் அது வெற்றிபெறுவதென்பது சாத்தியமற்றது. ஏனெனில் ஐ.தே.க.வும். ஐ.தே.க.வின் பங்காளிக் கட்சிகளும் சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். அதுமட்டுமன்றி, நல்லாட்சி அரசின் இன்னொரு பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களும் அரசிலிருப்பதால் அவர்களில் சிலரும் இப் பிரேரணைக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். தமிழ்க் கூட்டமைப்புடன் ஜே.வி.பி.க்கு புரிந்துணர்வுகள் இருப்பதனால் சம்பந்தனுக்கு எதிராக அவர்கள் வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. ஆகவே சிலவேளைகளில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அது இலகுவாக தோற்கடிக்கப்படும்.
இதேவேளை, பாராளுமன்றத்தில் எம்மிடம்தான் 54 உறுப்பினர்கள் உள்ளனர். அதனால், எமது அணிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டுமென மகிந்த ஆதரவு பொது எதிரணியினர் நல்லாட்சி அரசு பதவியேற்ற காலம் முதல் வலியுறுத்தி வருகின்ற போதிலும், அதனை சட்ட நுணுக்கங்களையும் அரசியலமைப்பையும் காரணம் காட்டி அரசாங்கம் நிராகரித்தே வந்துள்ளது. அதாவது பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளில் 6 கட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட கட்சிகள். அவற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐ.தே.க.வும் முஸ்லிம் காங்கிரஸும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன. ஜே.வி.பி. 6 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. ஈ.பி.டி.பி. ஒரு உறுப்பினரை மட்டுமே கொண்டுள்ளது. ஆகையால் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சித் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அதிகூடியளவான 16 உறுப்பினர்கள் இருப்பதால், அவர்களே பிரதான எதிர்க்கட்சியாக வருவதற்கு சட்டத்தில் இடமுண்டென்பதே அரசின் வாதம்.
அதுமட்டுமன்றி, பொது எதிரணியில் 54 உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவே உள்ளனர். அக்கட்சிகள் அரசின் பங்காளிகளாக இருப்பதனால் அவர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவே எதிர்க்கட்சித் தரப்பில் அமர்ந்திருக்கின்றார்கள். ஆகையால் அவர்கள் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வரமுடியாது. அப்படி வரவேண்டுமாக இருந்தால் அந்த 54 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  ஆகியவற்றின் உறுப்புரிமையிலிருந்து விலகி தனிக்கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டுமென்றும் அரசு சுட்டிக்காட்டியே அவர்களின் கோரிக்கையை இன்றுவரை நிராகரித்து வருகின்றது.
ஆகவே மகிந்த ஆதரவு பொது எதிரணியினர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தாலும் சம்பந்தனை அந்தப் பதவியிலிருந்து அகற்ற முடியாது. அவ்வாறெனில் தினேஷ் குணவர்தன எம்.பி. சுட்டிக்காட்டியதைப் போல் மக்களைப் பயன்படுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை கொடுப்பதனூடாக மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை இவர்களால் அகற்ற முடியும். இது சகல கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்கு தெரியும். எனினும் தமது அரசியல் இலாபங்களுக்காகவும் மக்கள் ஆதரவுகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் புதுப்புதுக் கதைகளாகக் கூறி நாட்டையும் மக்களையும் அரசியலையும் குழப்பி வருகின்றனர். சம்பந்தனின் பதவி பறிபோனால் அதனால் பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள் அல்ல அரசாங்கமே. அதிலும் குறிப்பாக ஐ.தே.க.வே என்பதனால் சம்பந்தனின் பதவியை காப்பாற்றுவதற்காக தனது பதவியை காப்பாற்றுவதற்கு எடுத்த முயற்சியைப் போல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் நடவடிக்கைகளை எடுப்பார் என்பது வெளிப்படை. இது சம்பந்தனுக்கும் நன்கு தெரிந்ததாலேயே அவர் இது தொடர்பில் அலட்டிக் கொள்ளாமல் முடிந்தால் என் பதவியை பிடுங்கிப் பாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments