Home » » மாகாணசபைத் தேர்தலை நடத்த 4 மாற்றுவழிகள்!

மாகாணசபைத் தேர்தலை நடத்த 4 மாற்றுவழிகள்!

மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது மக்கள் பிரதிநிதிகளினது பொறுப்பாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் ஊடக செய்திகள் பற்றிய உறுதிப்படுத்தல் அறிக்கையை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நான்கு மாற்றுவழிகள் உள்ளன. இந்த நான்கு வழிகளில் ஒன்றை தெரிவு செய்து பாராளுமன்றம் அங்கீகரிக்குமாயின் ஏற்கனவே கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகள் மற்றும் எதிர்வரும் செப்டெம்பரில் முடியவுள்ள மூன்று மாகாண சபைகள் உள்ளடங்கலாக ஆறு மாகாண சபைகளின் தேர்தல்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் நடத்த முடியும்.
மாகாணசபைத் தேர்தல்களை தேர்தல்கள் ஆணைக்குழு இழுத்தடிக்கவில்லை. தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட்டு மக்களின் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆணைக்குழு உள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் பாராளுமன்றத்தில் காணப்படும் சட்டசிக்கல்களை நீக்குவதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராத கட்சிகள் என சகல கட்சிகளுக்கும் கடிதங்கள் அனுப்பட்டுள்ளன.
கடந்த வருடம் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணசபைகளின் ஆயுட்காலங்கள் முடிவடைந்தன. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவற்றுக்கான வேட்புமனுக்களைக் கோர தயாரான நிலையிலேயே பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த திருத்தமும் உள்ளடக்கப்பட்டது. சட்டத்திருத்தத்துக்கு அமைய எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை பெப்ரவரி மாதம் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுக்கும் உரிமை மக்கள் பிரதிநிதிகளுக்கே உள்ளது. தேர்தல் முறையை மாற்றும் அதிகாரம் எதுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது. பாராளுமன்றமே தேர்தல் முறை பற்றிய தீர்மானங்களை எடுக்கிறது. அங்கு முடிவொன்றை எடுத்து இந்தத் தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டால் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |