ஆட்சி மாற்றத்தின் மூலமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் அரசியல் தீர்வு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தீர்க்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த எதிர்பார்ப்பை முதலீடாகக் கொண்டு அதனை பிரச்சாரப்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஆதரிக்குமாறும் பொதுத் தேர்தலில் தங்களை ஆதரிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தது. மக்களும் அந்த வேண்டுகோளுக்கு செவிசாய்திருந்தனர்.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் தீபாவளிப் பண்டிகையை தங்கள் குடும்பத்தினருடன் கழிப்பதற்கு புதிய அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என்று கோரி அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து இருந்தனர். அதன்போது எதிர்கட்சித்தலைவர் இரா.சம்மந்தனின் ஊடாக ஜனாதிபதி அவர்கள், அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு 6 மாதத்திற்குள் சாதகமான பதிலை வழங்குவதாகவும் தெரிவித்து இருந்தார். அதன் பின்னர் அரசியல் கைதிகளினாலும், அவர்களது உறவினர்களினாலும், அரசியல் கட்சிகளினாலும், பொது அமைப்புக்களினாலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று விட்டன. இன்று வரை தீர்வு தான் கிட்டவில்லை. அரசியல் கைதிகளை பொறுத்தவரை அவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு அல்லது தம்மீதான வழக்குளை துரிதப்படுத்தி அதற்கான தீர்ப்பினையே வழங்குமாறு கோருகின்றனர். நேரடியாக யுத்தகளத்தில் இருந்த சுமார் 12 ஆயிரம் வரையிலான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் அல்லது அவர்களுக்கு உதவி புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பலருக்கும் வழக்கு தாக்கல்கள் கூட செய்யப்படாது 10, 15 வருடங்களாக சிறைக் கூண்டில் இருக்கின்றார்கள். இன்னும் சிலருக்கு பதிய வழக்குகள் கூட ஆண்டுகள் பல கடந்த நிலையில் பதிவு செய்யப்படுகின்றது. இன்னும் சிலருக்கு அவர்கள் அனுபவித்து வரும் தண்டனை காலம் முடிவடையும் தருவாயில் புதிய வழக்குகள் போடப்படுகின்றன. இவைகளை பார்க்கின்ற போது அரசியல் கைதிகள் உயிருடன் வெளிவந்து தமது குடும்பத்துடனும், சமூகத்துடனும் இணைவார்களா என்ற கேள்வி பலமாக எழுகிறது.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டும். இதற்குள் நீதித்துறையும், சட்டத்துறையும் தலையீடு செய்வதால், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்தும் வகையில் இந்த சிக்கல்கள் களையப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்திருந்தனர். கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் கூட இந்த விவகாரத்தை ஒத்திவைப்பு பிரேரணை மூலம் பாராளுமன்றத்திற்கு எடுத்துரைத்து இருந்தார். எதிர்கட்சித் தலைவரினுடைய குரல்களுக்கு கூட பாராளுமன்றத்தில் மதிப்பளிக்கப்படாத நிலை இன்று வரை தொடர்கிறது. இந்தப் பின்னனியில் தங்கள் வழக்குகளை துரிதப்படுத்தி தண்டனை வழங்கவோ அல்லது விடுதலை செய்யவோ வலியுறுத்தி போராடிய சிலர் ஏற்கனவே மரணத்தை தழுவியுள்ளனர். இதன் நீட்சியாக கடந்த 15 ஆம் திகதி வவுனியாவை வதிவிடமாகக் கொண்ட சண்முகநாதன் தேவகன் என்ற அரசியல் கைதி, தனது வயது முதிர்ந்த காலத்தில் மனஉளைச்சலுக்கு உள்ளாகியும், உடல் ஆரோக்கியம் குன்றியும் மரணமடைந்திருந்தார். இவர் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற சமூகத்தில் மிகவும் மதிப்பு மிக்க பதவிகளை வகித்து வந்தவர். அவரது துணைவியார் இளைய சமுதாயத்தை செதுக்குகின்ற சிற்பியாக பல்கலைக்கழங்களிலும், தொழில்நுட்ப கல்லூரிகளிலும் விரிவுரையாளராக பணியாற்றியவர். ஒரு மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி அவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. விடுதலைப்புலிகளுக்கு வாகனம் எடுத்துக்கொடுத்தார் என்ற சந்தேகத்தில் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி 60 வயதில் கைது செய்யப்பட்டடு கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு, வழக்குகளுக்கு பிரசன்னமாகியிருந்த நிலையில் 2 வருடங்கள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தனது தண்டனைக்காலம் முடிவடைவதாக சந்தோசமாக இருந்த நிலையில் புதிய வழக்கொன்று பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே மரணமடைந்தார். தனது வயது முதிர்ந்த காலத்தில் கூட தனது குடும்பத்துடன் இணைந்து வாழ முடியவில்லையே என்ற ஏக்கமும், சிறைவாயில் இருந்து மீளப்போகின்றோம் என்ற மகிழ்ச்சியில் விழுந்த பேரிடியும் அவரை உள ரீதியாக பெரிதும் பாதித்து இருந்தது. தடுப்பில் அனுபவித்த துயரங்கள் அவரை உடல் ரீதியாக பாதிப்படைந்திருந்தது. அத்துடன் அவருடைய வயதும் இணைந்து கொண்டது. இவை அனைத்தும் சேர்ந்து தன்னுடைய ஆசைகள் எல்லாமே நிராசையாகி போக சமூகத்தின் சிறந்த அந்தஸ்தில் வாழ வேண்டிய ஒருவரின் உயிரை பறித்து விட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவற்றுக்கு தீர்வு காணும் வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற தமிழ் சமூகம் அதில் இருந்து ஒரு படி கீழ் இறங்கி இரண்டு பிஞ்சுக் குழந்தைகளின் அவலநிலையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பி வைக்கும் செயலில் இறங்கியுள்ளது. இதற்கு அணிசேர்க்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் தனித்தனியே ஜனாதிபதிக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
தன்னை கொல்ல வந்தவருக்கே மனிப்பு வழங்கி விடுதலை செய்த ஜனாதிபதி இரண்டு பிஞ்சுக் குழற்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் மனிதநேயத்துடன் அரசியல் கைதி ஆனந்த சுதாகரணை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரு அரசியல் கைதியின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அனைத்து விடயங்களுக்கும் தீர்வு காணப்படும் என்று நம்பிய தமிழ் சமூகத்திற்கு இந்த அரசியல் கைதிகளைக் கூட விடுவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஏமாற்றமாக மாறி தங்கள் மீது கோபம் அடையச் செய்திருக்கிறது. வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தவர்களும் அவர்கள் அரியணை ஏறுவதற்கு தமிழ் மக்களின் ஆதரைவப் பெற்றுக் கொடுத்தவர்களும் தம்மை ஏமாற்றி விட்டதாகவே ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் எண்ணுகின்றது. இந்தநிலையில் ஏனைய விடயங்கள் எவ்வாறு நிறைவேறப் போகின்றன என்ற கேள்வியும் அவர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனை, காணிகள் விடுவிப்பு, அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது காத்திரமான பங்களிப்பை செய்யவில்லை என்ற ஆதங்கமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இனியாவது அரசாங்கம் விழித்துக் கொண்டு தன்னுடைய இறுக்கமான மனோபாவத்தில் இருந்து விடுபட்டு இதசுத்தியுடனான நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

N5
0 Comments