Home » » ஸ்டீவன் சுமித், வார்னருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை

ஸ்டீவன் சுமித், வார்னருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட், தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற பொருளை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆவதற்காக தங்கள் அணியின் சீனியர் வீரர்கள் கூட்டு சேர்ந்து பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் ஒப்புக் கொண்டார்.
நாட்டின் கவுரவத்துக்கு ஸ்டீவன் சுமித் சகாக்கள் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் வரிந்து கட்டின. அதிர்ச்சிக்குள்ளான ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டார். இதன் எதிரொலியாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது பொறுப்பில் இருந்து விலகினர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்திய விசாரணை முடிவில் ஸ்டீவன் சுமித்துக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதமும், ஒரு டெஸ்டில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. பான்கிராப்டுக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதத்துடன், 3 தகுதி இழப்பு புள்ளியும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. பந்தை சேதப்படுத்திய பென்கிராப்டுக்கு 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டதன் மூலம், இரு முன்னணி வீரர்களும் சொந்த மண்ணில் டிசம்பர், ஜனவரி மாதம் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட முடியாது. முன்னதாக, ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரை உடனடியாக தாயகம் திரும்ப ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லாண்ட் நேற்றிரவு உத்தரவிட்டார்.(15)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |