வடக்கு- கிழக்கு வாழ் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவே கட்சித் தலைவர்களுடன் பேசி வருகின்றோம் என வடக்கு – கிழக்கு மலையக தமிழ் மக்களின் ஒன்றிய இணைப்பாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.பி.நடராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று தெரிவித்ததாவது,
வடக்கு – கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், வாழ்வாதாரம், கல்வி எனப் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய தேவையும், அவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதன்காரணமாக வடக்கு- கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்ப்பில் பல்வேறு கட்சித் தலைவர்களுடனும், பல்வேறு தரப்புக்களுடனும் நாம் பேசி வருகின்றோம்.
ஐ.நா பிரதிநிதி றீற்டா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர்கள் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கின்றோம்.
அதனடிப்படையிலேயே நாம் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஐயாவுடனும் பேசியிருந்தோம். அடுத்து வரும் நாட்களில் வேறு சில தலைவர்களையும் சந்தித்து பேசியுள்ளோம். வடக்கு – கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் நலன்சார்ந்தே பேசி வருகின்றோம்.
சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது போன்று நாம் எந்தவொரு கட்சியுடன் இணைந்தோ அல்லது எந்தவொரு கட்சியில் இருந்து பிரிந்தோ செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments