Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள்,உத்தியோகத்தர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் தாக்குதல் நடாத்தியவர்களை கைதுசெய்யக்கோரியும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.நேற்று வியாழக்கிழமை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் குப்பைகளை கொட்டிவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார ஊழியர் ஜெயராஜ் என்பவர் அப்பகுதியை சேர்ந்த சிலரால் தாக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் குப்பை கொட்டுவதற்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையினை மேல் நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து நேற்று முதல் குப்பைகள் கொட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்ததுடன் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் பொலிஸ் பாதுகாப்புடன் குப்பைகொட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குப்பையினை கொட்டிவிட்டு திரும்பிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவரே தாக்கப்பட்டுள்ளார்.
இதனைக்கண்டித்தும் தாக்குதல் நடாத்தியவர்களை கைதுசெய்யக்கோரியும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் பேரணியாக வந்து மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தில் மகஜர் ஒன்றை கையளித்ததுடன் மீண்டும் காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்சேயன் உட்பட மாநகரசபையின் உத்தியோகத்தர்கள்,சுகாதார ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதேநேரம் தமது சக ஊழியர் தாக்கப்பட்டது தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தாக்கியவர்கள் கைதுசெய்யப்படும் வரையில் தாங்கள் கடமைக்கு திரும்ப போவதில்லையென சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
DSC01670DSC01685DSC01697

Post a Comment

0 Comments