Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சரத் பொன்சேகாவின் காதைப் பிடித்து வெளியேற்ற வேண்டும்! - சரத் வீரசேகர

இராணுவத்தையும், பிக்குகளையும் விமர்சிப்பவர்களை ரணில் விக்கிரமசிங்க காதில் பிடித்து அமைச்சரவையில் இருந்து இழுத்து வீச வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் விஜயசேகர தெரிவித்தார். “ சரத் பொன்சேகா அவரது தனிப்பட்ட நலனுக்காக முன்னாள் இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரியவைப் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் காட்டிக் கொடுக்கின்றார். தமிழீழத்தைக் கோரிப் போராடும் புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு ஏற்ப சரத் பொன்சேகா செயற்படுகின்றார்.
படையினர் மீதும் இந்த நாட்டின் மீதும் அக்கறை வைத்து செயற்படும் எல்லே குணவன்ச தேரரையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இவ்வாறானவர்களை வைத்திருப்பதால் இந்த அரசுக்குத்தான் கெட்ட பெயர். இவரை ரணில் காதில் பிடித்து அமைச்சரவையில் இருந்து இழுத்து வீச வேண்டும்.
நாம் இன்று படிப்படியாகப் பயங்கரவாதம் என்ற சொல்லை மறந்து வருகின்றோம். அரசியல் தேவைகளுக்காக அப்பாவி மக்களைக் கொலை செய்வதுதான் பயங்கரவாதமாகும். அப்படிப்பட்ட பயங்கரவாதத்தையும் அந்தப் பயங்கரவாதத்தை நிகழ்த்தியவர்களையும் நாம் மறந்துகொண்டு வருவது வேதனையளிக்கின்றது. இப்படிப்பட்ட பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்தவர்கள் படையினர். 27ஆயிரம் படையினர் உயிரை இழந்து 14 ஆயிரம் படையினர் ஊனமாகித்தான் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டு மக்கள் இப்போது நிம்மதியாக வாழ்வதற்கு வழியேற்படுத்தினர்.
இன்று அந்தப் படையினரின் நிலைமை பரிதாபகரமானது. எஞ்சியிருக்கும் படையினரை இந்த அரசு நடத்தும் விதத்தைப் பாருங்கள். போலிக்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர்களைச் சிறையில் அடைகின்றனர். பயங்கரவாதியைச் சிறையில் இருந்து விடுவிக்கின்றனர். தப்பி ஓடும்போது படையினரால் சுடப்பட்டு உயிரிழந்த புலிகளின் குடும்பங்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்.
அது மட்டுமா தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளுக்கு இணங்கி படை முகாம்களை அகற்றி தேசிய பாதுகாப்பைச் சிக்கலில் தள்ளியுள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தை நிறுவி உயிரிழந்த படையினரையும் புலிகளையும் சமமாக மதித்து அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.அந்த அலுவலகத்தின் ஊடாகப் பொய்ச் சாட்சிகளைத் திரட்டிப் படையினரைப் பன்னாட்டுப் போர்க் குற்ற நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கும் திட்டமிடுகின்றது.
ஓய்வூதியம் கேட்டுப் போராட்டம் நடத்தும் ஊனமுற்ற படையினர்மீது தாக்குதல் நடத்தி அவர்களை மேலும் காயப்படுத்து கின்றது.எமது படையினர் உயிரை இழந்து – ஊனமுற்று காப்பாற்றிய இந்த நாட்டை மீண்டும் பயங்கரவாதிகளிடம் கூட்டாட்சி முறைமையின்கீழ் பிரித்துக் கொடுப்பதற்கு இந்த அரசு முற்படுகிறது. இவ்வாறு படையினரைக் கவனிக்கும் ஓர் இந்த உலகில் எங்குமில்லை – என்றார்.

Post a Comment

0 Comments