Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பௌத்தத்துக்கு முன்னுரிமை, ஒரே தேசத்துக்கு தமிழ்கட்சிகள் இணக்கம்! - என்கிறார் பிரதமர்

வரலாற்றில் முதற்தடவையாக தமிழ்க் கட்சிகள் ஒரே தேசத்தை உருவாக்குவதற்கும் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கும் உடன்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமிழ் கட்சிகள் முதன் முறையாக தமது பாரம்பரிய நிலைப்பாட்டை தளர்த்தியிருப்பதாக கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையின் மூலம் இந்நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வைத் தேடிக்கொள்ள முடிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
காலியில் பொலிஸ் வீட்டுத்தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 'அரசியல் பிரச்சினையின் காரணமாகவே வடக்கில் போர் மூண்டது. போருக்கு பின்பும் கூட அதைத் தீர்த்துக்கொள்ள எமக்கு சந்தர்ப்பம் காணப்படவில்லை. அன்று தெற்கின் கட்சிகளும், சிங்கள, முஸ்லிம் மக்களும் இலங்கை ஒரு தேசமாக இருக்க வேண்டும் என பேசிவந்தார்கள். இந்நாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி முறையொன்று தேவையென தமிழ் கட்சிகள் தெரிவித்தன. போருக்கு பின்பும் இக்கருத்து நிலை காணப்பட்டது. இந்நிலைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவே நாம் செயற்பட்டோம்.தற்பொழுது எமக்கு அதற்கான தீர்வும் கிடைத்துள்ளது.
அரசியலமைப்புச் சபை வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் அத்தீர்வை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. பிரதான கட்சிகள் இரண்டும் அவ்விடைக்கால அறிக்கையின் முதற் பந்தியில் உள்ள பிரிந்துரைகளுக்கமைய உயரிய அதிகாரப் பகிர்வுக்கு பாராளுமன்றத்திற்கு மேலதிகமாக செனட் சபையொன்றை உருவாக்குதல், மனித உரிமை முறையொன்றை தாபித்தல், சுயாதீனமான நீதித்துறையை உருவாக்குதல், யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்தல், ஒரு தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் பௌத்த சமயத்திற்கு முன்னுரிமையளித்தல் போன்ற விடயங்களை கருத்திற் கொள்ளத் தயார் என தமிழ் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னர் எப்போதுமே இவ்வாறானதொரு கருத்தை இக்கட்சிகள் தெரிவித்திருக்கவில்லை. இதற்கு முன்னர் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இழுபறி நிலையில் இருக்கும் போது தமிழ் கட்சிகளும் ஒரு பக்கத்தில் ஸ்தம்பிதமடைந்திருந்தன. தற்பொழுது நாமும் உங்களுடன் வரத் தயார் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 2015 பொது வேட்பாளர் மைத்திரிபாலவை வெற்றிபெறச் செய்ய அவர்கள் ஒத்துழைத்தார்கள் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments