கிழக்கு மாகாணத்தில் அரச ஊழியர்களின் ஊதியங்களுக்காக 16பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.மட்டக்களப்ப கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கோலாகலமான முறையில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் ரோகித போகொல்லாகம கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,விசேட அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.நிசாம் மற்றும் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.
மட்டக்களப்ப கல்வி வலயத்தில் பல்வேறு சாதனைகளைப்படைத்து கிழக்கு மாகாணத்தின் பெருமையினை இலங்கை முழுவதுக்கும் கொண்டுசென்ற பெருமையினைக்கொண்டதாக வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை இருந்துவருகின்றது.
இதன்போது கற்றல் செயற்பாடுகள்,இணைப்பாட விதான செயற்பாடுகளில் பாடசாலை மட்டம் மாகாண மட்டம் தேசிய மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்கள் அதிதிகளினால் கௌவிக்கப்பட்டனர்.
இந்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அதிதிகளும் இதன்போது நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுனர்,
இந்த பாடசாலை நீண்டகால வரலாற்று பாரம்பரியத்தினைக்கொண்டது.இந்த பாடசாலையின் முதல் அதிபராக இருந்த வின்சன்ட் அவர்களின் பெயர் இந்த பாடசாலைக்கு சூட்டப்பட்டது.இன்று இலங்கையில் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாக இது திகழ்கின்றது.
இந்த நாட்டில் ஒருவரை ஒருவர் மதிக்கும் சூழல் ஏற்பட்டுவருகின்றது.அதற்கான நடவடிக்கைகளை இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவருகின்றார்.இன்று அனைத்து இனக்குழுமங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அனைத்தையும் அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக செயற்பட்டுவருகின்றோம்.ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கல்வி என்பது முக்கியமான பகுதியாக இன்று இருந்துவருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் கல்வியை மேம்படுத்துவம் வகையில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளார்.அதனைப்போன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள நல்ல ஆளுமைமிக்க கல்வியமைச்சரைக்கொண்டுள்ளோம்.கிழக்கு மாகாணத்தில் அனைவரும் இணைந்து கல்வியை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டுவருகின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் 1170 பாடசாலைகள் உள்ளது.30தேசிய பாடசாலைகள் உள்ளன.கல்விக்காக அதிகளவான பணம் ஒதுக்கீடுசெய்யப்படுகின்றது.கிழக்கு மாகாண நிர்வாகத்தில் 40ஆயிரம் அரச உத்தியோத்தர்கள் கிழக்கில் சேவையாற்றுகின்றனர்.
அதில் 20ஆயிரம் பேர் ஆசிரியர்களாக உள்ளனர்.கிழக்கு மாகாணசபையில் சம்பளம் வழங்குவதற்காக வருடாந்தம் 16பில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்படுகின்றது.அவற்றில் 08பில்லியன் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படுகின்றது.
இவ்வளவு நிதியொதுக்கீடுசெய்யப்படுகின்றபோதிலும் கல்வியின் வெளியீடு போதாத நிலையிலேயே இருக்கின்றது.இது தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் பணிப்பாளருடனும் கலந்துரையாடியுள்ளேன்.அந்தவகையில் சிறந்த பெறுபேற்றை எமக்கு இந்த வின்சன்ட் தேசிய பாடசாலை பெற்றுத்தருகின்றது.
ஆசிரியர்கள் மாணவர்களுடன் நேரத்தினை செலவிட்டு அவர்களிடம் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு அதனை நிவர்த்திசெய்து அந்தமாணவனை பலமானவராக மாற்றவேண்டும்.இதன்மூலமே நாங்கள் கல்வியில் வளர்ச்சியை காணமுடியும்.




0 Comments