பிரித்தானியாவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 8 ஆவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை தெரிவித்தனர்.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிற்பகல் 2 மணியளவில் பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலும் மாலை 5 மணியளவில் ஹைட் பார்க்கில் பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலும் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக தமிழீழ தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பல்வேறு முக்கியஸ்தர்கள் உரையாற்றியதுடன் ஸ்ரீலங்காவில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பில் குற்றவியல் நீதிமன்றம் அல்லது சிறப்பு நடுவர் மன்று ஒன்றினூடாக விசாரணை நடத்த ஆவண செய்யுமாறு கோரி பிரித்தானிய பிரதமரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
லண்டன் ஹைட் பார்க்கில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற நிகழ்விலும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். விசேடமாக அமைக்கப்பட்ட மேடையில் நிகழ்வுகள் நடைபெற்றன. மழை தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தபோதிலும் குடைகளை பிடித்தவண்ணம் இந்த நிகழ்வில் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை பிரித்தானியாவின் கிளாஸ்க்கோவில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்விலும் ஏராளமான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்வையும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
0 comments: