தேர்தல்கள் திணைக்களமும், கல்வியமைச்சும் இணைந்து பாடசாலைகள் தோறும் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதனடிப்படையில், மட்டக்களப்பின் பிரபல பெண்கள் கல்லூரியான புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டு தெரிவிற்கான தேர்தல் நேற்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
தரம் 6 முதல் 13 வரையுள்ள மாணவர்களிலிருந்து தெரிவு செய்யப்படும் மாணவ பிரதிநிதிகளைக் கொண்டு மாணவர் பாராளுமன்றம் தாபிக்கப்படவுள்ளது.
இந்தநிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சுசீலன் மற்றும் உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர் அருட் சகோதரி அருள் மரியா, ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இத்தேர்தல் கடமைகளில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டதுடன், வாக்கு எண்ணும் கடமையிலும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணிகளிலும் ஈடுபடவுள்ளனர்.
தேசிய ரீதியில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாணவ பாராளுமன்ற செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மாணவர் பாராளுமன்றத்தில் சபாநாயகர், பிரதமர், சபை முதல்வர், பிரதி சபாநாயகர், பிரதி செயற்குழுத் தலைவர், 10 அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள், 10 ஆலோசனைச் செயற்குழுக்கள் அமையவுள்ளன.
மாணவர் நட்புறவு விருத்தி மற்றும் மாணவர் நலன்புரி அமைச்சு, மாணவர் தேர்ச்சி மறறும் புத்தாக்க அலுவல்கள் அமைச்சு, பாடசாலைகளுக்கிடையே நட்புறவை கட்டியெழுப்பும் மற்றும் விருத்தி செய்யும் அமைச்சு, கல்வி, மனிதவள அபிவிருத்தி மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சு,
பண்பாட்டு சமய அலுவல்கள் மற்றும் விழுமிய மேம்பாட்டு அமைச்சு, சமூக நல்லிணக்கம் மற்றும் மாணவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமைச்சு, சமுதாயத் தொடர்பு அபிவிருத்தி மற்றும் சமுதாய சேவைகள் அமைச்சு, சுகாதார போசாக்கு மற்றும் விளையாட்டு அலுவல்கள் அமைச்சு, விவசாய மற்றும் சூழல் அபிவிருத்தி அமைச்சு, பௌதீக வள அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் அமையவுள்ளன.
0 Comments