Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிழக்கின் எழுக தமிழில் அலையாய் திரள வேண்டிய கட்டாயத்தில் தமிழ் பேசும் மக்கள்!

இலங்கை அரசாங்கத்திற்கும், ஐ.நா மனிதவுரிமை ஆணையகத்திற்கும் இடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட யுத்தக் குற்ற விசாரணை பொறிமுறை, காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான பொறுப்புக் கூறல், மனிதவுரிமை மீறல் தொடர்பான விசாரணை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்குதல், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் மக்களின் காணிகளை திரும்ப வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதவுரிமை ஆணையகத்தின் 34வது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் எழுத்து மூலமான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. இந்தநிலையில் கிழக்கில் தமிழ் மக்கள் பேரவையினால முன்னெடுக்கப்படுகின்ற எழுக தமிழ் பேரணியானது இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கவிருக்கிருக்கிறது.
2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 24 ஆம் திகதி நடைபெற்ற வடக்கின் எழுக தமிழுக்கும், நாளை நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கும் பல்வேறு தொடர்புகள் இருப்பதுடன், தற்போதைய பேரணியானது அதிக முக்கியத்துவத்தையும் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரனையுடன் ஏற்றுக் கொண்ட விடயங்கள் மந்த கதியில் வேண்டா வெறுப்பாக நடைபெறுவதுடன், தமிழ் தரப்பு அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திற்கு போதிய அழுத்தங்களைக் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாத்தை பெற்றுக் கொடுக்க தவறிவிட்டது என்று மக்கள் உணரத் தலைப்பட்டுள்ள நிலையில் இப்பேரணி நடைபெறுவது மற்றொரு சிறப்பம்சமாகும்.
இந்தப் பேரணியைக் குழப்புவதற்காக கூட்டமைப்புக்குள் இருக்கக் கூடிய சிலரும், அரசாங்கத் தரப்பும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதில் இருந்து இதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. அண்மையில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட மூன்று போராட்டங்களும் மக்களின் எழுச்சியை வெளிக் கொணர்வதாக இருந்தது. மக்களின் கோரிக்கையை முன்வைத்து அவர்களின் அபிலாசைகளை தீர்ப்பதற்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய கட்சித் தலைமைகள் மக்களின் பின்னால் ஒளிந்து கொள்ளக் கூடிய புதிய வரலாறு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட அடையாள உண்ணாவிரதமும், அதனைத் தொடர்ந்து அவர்கள் அன்றே மேற்கொண்ட சாகும் வரையிலான உண்ணாவிரத அறிவிப்பும், அரசாங்கத்தையோ அல்லது எதிர்கட்சித் தலைவரையோ எந்தளவிலும் பாதித்ததாக தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்தே அவர்கள் சொல்லியவாறே ஜனவரி 23 முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு நேரடியாக அரசசாங்க தரப்பிற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களையடுத்து அந்த உண்ணாவிரதப் போரட்டம் கைவிடப்பட்டது. இதேபோன்று முல்லைத்தீவு கேப்பாபுலவில் புலக்குடியிருப்பு மக்களும் அவர்களுக்கு ஆதரவாக புதுக்குடியிருப்பு மக்களும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களது காணிகளை கையளிக்குமாறு கோரி ஒருவாரத்திற்கும் மேலாக இரவுபகலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகின்றது. இதில் ஒரு திருப்பமாக கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக சிங்கள ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டிருந்தனர். தமது சொந்தக் காணிகளுக்காக போராடுகின்ற அந்த மக்களின் போராட்டம் நியாயமானது என்பது அவர்களின் மூலம்மும், இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் பிரச்சனைகள் இந்த புதிய நல்லாட்சி அல்லது தேசிய அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்தின் கீழும் தீர்க்கப்படாமல் உள்ளது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள தமக்குரிய நிவாரணத்தை தாமே போராடி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வரலாற்று உண்மையை மேற்கூறிய போராட்டங்கள் நிரூபித்துள்ளன.
மக்களது இத்தகைய போராட்டங்களின் கோரிக்கைகளையும், தமிழ் மக்களின் நிரந்தர தீர்வுக்கான அபிலாசைகளையும், அவர்கள் காலம் காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளையும் ஜனநாயக வழியில் ஒரு வடிவம் கொடுப்பதற்காகவே நாளைய தினம் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பேரவையினால் எழுக தமிழ் பேரணி நடத்தப்படுகிறது. தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைளும், தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்ட விடயங்களையும் மீண்டும் தமிழ் பேசும் மக்கள் இந்த அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் வலியுறுத்துவதன் மூலமே தமிழ் தேசிய இனம் ஒரு நிரந்தரமான, நிம்மதியான தீர்வினைப் பெற முடியும். அதற்கான ஒருமித்த குரலே எழுக தமிழ் பேரணி.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத்தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையினர் இந்த பேரணியானது எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது கூட்டமைப்புக்கோ எதிரானது அல்ல என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளதுடன், அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதற்கான ஒரு வழிமுறையே என்பதையும் திரும்ப திரும்ப கூறிவருகின்றனர். இந்நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சிலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்ப்பு குரல் கொடுப்பது வேதனையாகவும் கவலையாகவும் உள்ளது.
வடமாகாண முதலமைச்சாரும், பேரiயின் இணைத்தலைவருமான விக்கினேஸ்வரன் அவர்கள் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அழைப்பு கட்சி சார்ந்ததல்ல. மதம் சார்ந்ததல்ல. இனம் சார்ந்ததல்ல. எமது அழைப்பு தமிழ்மொழி சார்ந்தது. தமிழ் மொழி பேசும் யாவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். எமது பவனி ‘எழுக தமிழர்’ என்று பெயரிடப்படவில்லை. இந்து, முஸ்லீம், கிறீஸ்தவ சகோதரத்துவத்தை அவர்களின் பொது மொழியாம் செந்தமிழ் ஊடாக நிலை நிறுத்தவே எமது பவனியானது ‘எழுக தமிழ்’ என்று பெயர்பெற்றது. ஏன் தமிழுக்கு முதலிடம் கொடுத்துள்ளீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் கிழக்கு மாகாணத்தில் 85 சதவிகிதத்திற்கு மேல் தமிழ்ப் பேசுவோர் இருந்த காலம் போய் தற்போது மூன்றில் ஒரு பங்கு சிங்கள மொழியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காணிகள் பறிபோயுள்ளன. கலைகள் சிதைவடைந்துள்ளன. கலாச்சாரம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. மொத்தத்தில் ‘எழுக சிங்களம்’ எல்லை தாண்டி வந்து இங்கு குடி கொண்டுள்ளது. சுயநலம் மிக்க அரசியல்வாதிகளுக்கன்றி மற்றவர்கள் யாவர்க்கும் இது வெள்ளிடைமலை. இது காறும் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்கள் இனியாவது விடிவு காணவே ‘எழுக தமிழ்’ எழுந்து வருகின்றது’ என அதன் அவசியம் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாறுபட்டுள்ள சர்வதேச அரசியல் அரங்கில் புதிய சர்வதேச ஆட்சியாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை ஒருமித்து வெளிப்படுத்த வேண்டிய தேவையும் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் முனைப்பு பெற்றுள்ள நிலையிலும், ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையிலும் தமிழ் மக்கள் ஒருமித்த குரலாக அடக்குமுறைக்கு எதிராகவும், தமது அபிலாசைகளையும் முன்வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்தப் பேரணியில் மக்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வுடன் வடக்கு மக்கள் இரக்கின்றார்கள். ஒரு மாறுபட்ட சூழலில் இந்தப் பேரணி நடைபெறுவதன் காரணமாக தன்னெழுச்சியாக வடக்கில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது.
கிழக்கைப் பொறுத்த வரையில் இனஒடுக்குமுறையை அதிகம் உணர்ந்தவர்கள் என்ற காரணத்தினாலும், தங்களது நாளாந்த வாழ்வாதாரமும், தங்களது இன அடையாளமும் எவ்வாறு நசுக்கப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டதன் விளைவாகவே தேசிய இனவிடுதலைப் பேராட்டத்தில் பெருமளவில் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஆகவே எழுக தமிழ் பேரணியில் அவர்களது பங்களிப்பு பெருமளவில் இருக்கும் என்பதை மறுத்து விடமுடியாது.
இந்த பேரணிக்கும் தேர்தல் அரசியலுக்கும் தொடர்பில்லை. எமது மக்களின் அபிலாசைகளை பிரதிகள் பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் தொடாந்தும் வலியுறுத்தியும் கூட முன்னேற்றம் ஏற்படாததால் மக்கள் எழுச்சியுடன் அணிதிரள வேண்டியது அவர்களது கடமையாகும். ஆகவே வடக்கு, கிழக்கு, மொழி, இனம், மதம் என்ற பாகுபாடு பாராமல் வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், அவர்கள் சார்ந்த பொது அமைப்புக்கள், அந்த மக்களின் பிரதிநிதிகளும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயம்.

Post a Comment

0 Comments