தமிழர்களை கள்ளத்தோணியில் வந்ததாக கூறுகின்றவர்கள் மகா வம்சத்தை இந்த நாட்டில் பௌத்த மதம் எப்படி வந்தது என்பதை உணர்ந்துகொள்வார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலய முப்பெருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் எம்.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த 35 வருடகாலமாக தமிழ் மாணவர்கள் கல்வியைபெறுவதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டது.ஆனால் இன்று இந்த நாட்டில் உள்ள சூழ்நிலையில் மாணவர்கள் தங்குதடையின்றி கல்வியைப்பெறக்கூடிய சூழ்நிலையுள்ளது.வடக்கு கிழக்கில் கல்வி நிலை முன்னேற்றமடைந்துசெல்கின்றது.இதற்கு நாட்டில் உள்ள ஸ்திரத்தன்மையும் காரணமாக இருக்கலாம்.
ஆயுத போராட்டங்கள் நடந்த வடகிழக்கு மாகாணங்களில் சுமுகமான நிலையிருந்துவருகின்றது.அதனை குழப்புவதற்காக கடந்த கால கொடுங்கோல் ஆட்சியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கடந்த சில தினங்களாக வடகிழக்கு உட்பட தென்பகுதி மத்திய மாகாணம் ஆகிய பகுதிகளில் பதற்ற நிலைகளை ஏற்படுத்துவதற்கு சிலர் தூண்டப்படும் நிலைமை ஏற்பட்டுவருகின்றது.
இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பானத்தில் ஆவா குழு என்ற பெயரில் அப்பாவி இளைஞாகள் கைதுசெய்யப்படுவதுடன் பல்கலைக்கழக மாணவர்களை சுட்டுக்கொலைசெய்கின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் காவி உடைதரித்த காவாலியின் அட்டகாசம் தலைக்கு மேலே இருக்கின்றது.அம்பாறை மாவட்;டத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழும் மாணிக்கமடு பகுதியில் புத்தர் சிலை உருவாக்கப்படுவது மட்டுமன்றி பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கு மேலாக பாராளுமன்றத்தில் மகிந்த அணியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த நாட்டில் இராணுவ புரட்சி ஒன்றுவருவதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக ஜனாதிபதியை நோக்கி கூறியுள்ளார்.இவற்றையெல்லாம் நோக்கும்போது இந்த நாட்டில் என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் அனைவரும் அறியமுடியும்.
இந்த நாட்டில் சுமுகமான ஆட்சி நடைபெறக்கூடாது.தமிழ் பேசும் இனங்கள் நசுக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.இந்த நாட்டில் ஒரு கொடுங்கோல் ஆட்சி நடைபெறவேண்டும் என்பதற்காக இந்த நல்லாட்சியை குழப்பும் வகையிலான சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
காவியுடை தரித்தவர்கள் அந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு துணைபோகும் நிலையேற்பட்டுள்ளது.பொதுபலசேவை சேர்ந்த ஞானரெட்ன தேரர் அவர்கள் இந்த நாட்டில் எதுவும் பேசலாம்.ஆனால் அவருக்கு எதிராக சட்டம் பாவிக்கப்படக்கூடாது என்ற நிலையுள்ளது.முஸ்லிம்களை தாக்குகின்றார்.
தமிழர்களை கள்ளத்தோணியில் வந்ததாக கூறுகின்றார்.இந்த தேரர்கள் மகாவம்சத்தினை படித்திருந்தால் இந்த நாட்டில் பௌத்த மதம் எப்படி வந்தது.அதற்கு முன்பாக இங்கு என்ன மதம் இருந்தது.இங்கு ஆதிகுடிகளாக யார் இருந்தார்கள் என்பதை உணர்ந்துகொள்வார்கள்.
அனைத்து மக்களையும் நேசித்த சோபித தேரர்கள் இருந்த இந்த நாட்டை குழப்பவேண்டும்,நாட்டை சீரழிக்கவேண்டும் என்ற நோக்குடன் செயற்படும் பௌத்த மதகுருமார்களை ஞானம்பெறுவதற்காக மனித நடமாட்டம் இல்லாத சந்திரமண்டலத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும்.
இந்த நாட்டில் எமக்கான உரிமைகள் பெறப்படவேண்டும்.ஒரு சுயாட்சி வேண்டுமென்பதற்காக ஆரம்பகாலத்தில் தமிழ் பேசும் தலைமைகள் இணைந்து போராடினார்கள்.இடையில் தமிழ் -முஸ்லிம் மக்களை பிரித்து இரு இனங்களையும் மோதவிட்டார்கள்.அந்த நிலை மாறவேண்டும்.இந்த நாட்டில் தமிழ் பேசும் இனங்கள் ஒற்றுமையுடன் இணைந்த வடகிழக்கில் சுயாட்சியுடன் வாழவேண்டுமானால் தமிழ் -முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் பேசும் அரசியல்வாதிகளாக மாறவேண்டும்.
இன்று பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பு உருவாகிக்கொண்டுள்ளது.ஜனவரி மாதம் அது தொடர்பான விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.இந்தவேளையில் தமிழ் -முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றாக இருக்கவேண்டும்.நாங்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதை காவியுடைதரித்த பிக்குகளும் ராஜபக்ஸ ஆட்சியில் இருந்த இனவாதிகளும் உணர்த்திக்கொண்டுள்ளனர்.
இணைந்த வடகிழக்கிற்குள் எமது உரிமைகளை நாங்கள் பகிர்ந்துகொண்டு எங்களை நாங்களே ஆளக்கூடிய சுயாட்சியை உருவாக்குவதற்கு கைகோர்த்து செயற்படவேண்டும்.அதன் ஊடாக எமது பகுதி அபிவிருத்தியை நாங்களே செய்து நிம்மதியாக வாழவேண்டும்.







0 Comments