Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குழந்தைகளை சாப்பிட வைக்க என்ன செய்யலாம்?

என் செல்லம் இல்ல….இதோ ரெண்டே ஸ்பூன் சாப்பிடு போதும் என்று அம்மா கெஞ்ச ‘மாத்தேன் போ….என்று மழலையில் மறுக்கும் குழந்தையின் அம்மாவா நீங்கள். உங்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை.
குழந்தைகளுக்கு விதம் விதமான சத்தான உணவுகளைத் தர வேண்டும். அப்போதுதான் சாப்பிட விரும்புவார்கள். ஒரு புது உணவை உங்கள் குழந்தைக்கு நேரடியாக அறிமுகப்படுத்தும் போது அவர்கள் உண்ண மறுப்பார்கள். அதையே அவர்களுக்கு விருப்பமான கார்டூன் கதைகள் சொல்லியபடியே ஊட்டிவிட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். உதாரணமாக அவர்கள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் கதாபாத்திரங்களை முன் உதாரணமாக்கலாம்.  பப்பாயி செய்லருக்கு பிடிச்ச ஐட்டம் என்னன்னு என்று கேட்கையில் மிஸ்டர் வாண்டு புதினா என்று சொல்லும், அந்த புதினாவைத் தான் அம்மா க்ரீன் சட்னியா பண்ணியிருக்கேன், பப்பாயி மாதிரி உறுதியானவனா வருவே எனும் போது குட்டீஸ் இது வேணாம் அது வேணாம் என்று அடம் பிடிக்காமல் சமத்தாக சாப்பிட்டுவிடும். இப்படி சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை கொஞ்சம் சாப்பிட வைக்க சில வழிமுறைகள் இதோ…
1. குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவு பார்ப்பதற்கு அழகாகவும், அளவில் குறைவானதாகவும் இருக்க வேண்டும். பார்த்தவுடன் மலைப்பைத் தரும் உணவுகள் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் ஒத்துக் கொள்வதில்லை. எதாவது காரணத்தால் குழந்தை சாப்பிட மறுத்தால் உணவைத் திணிக்காதீர்கள்.
2. குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே பச்சை காய்கறிகள் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திவிடுங்கள். அவற்றுக்குப் பதிலாக காய்கறி வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுங்கள். அதுவும் பிடிக்கவில்லை என்றால்  பழங்கள், ஜூஸ் கொடுக்கலாம்.
3. சாப்பாட்டை விட நொறுக்குத் தீனிகளில் அதிக ஆர்வம் காட்டும் குழந்தைகளுக்கு பழம், தயிர், பாலாடைக்கட்டி பழரசம் போன்ற சத்தான ஆகாரங்களை கொடுக்கலாம்.
180584656_xs
4. சாப்பிட மறுக்கும் குழந்தைகளை ஒரு போதும் தண்டிக்காதீர்கள்.அவர்களிடம் ‘இப்ப நீ சாப்பிடலைன்னா பூச்சாண்டிக்கு போட்றுவேன், உம்மாச்சி கண்ணைக் குத்தும், பெரிய  மாடு முட்டும்’ எனச் சொல்லி பயம் காட்டாதீர்கள். அது குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியை பாதிக்கும். வற்புறுத்தி உங்கள் குழந்தையை சாப்பிட வைக்க நினைப்பது தவறு. அது அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான கொஞ்ச நஞ்ச ஆசையையும் நீக்கி விடும்.
5. குழந்தைகளை தினமும் ஒரே நேரத்திற்கு சாப்பிடப் பழக்குங்கள். குழந்தைகளைத் தனியே சாப்பிட வைப்பதை விட மற்ற குழந்தைகளுடன் சேர்த்து சாப்பிடச் சொல்லலாம். அப்போது வழக்கமாக சாப்பிடுவதை விடக் கொஞ்சமாவது அதிகம் சாப்பிடுவதைப் பார்ப்பீர்கள்.
6. உணவுகளை குறைந்த அளவில் சிறு இடைவெளி விட்டு விட்டு கொடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான திட உணவுகளை கொடுக்கும் டிப்ஸ். இதனால் குழந்தைக்கு வயிறு நிறைவதோடு, அதன் ருசியும் பிடித்துவிடும் நொறுக்குத் தீனி, காபி டீ போன்றவற்றை அடிக்கடி தர‌க் கூடாது. தினமும் இரண்டு தம்ளர் பாலும் 100 கிராம் பழமும் தரவேண்டும்.
கடைசியாக குழந்தைகளின் வளர்ச்சி என்பது உடலுக்கானது மட்டும் அல்ல, குழந்தைகள் எல்லா விதத்திலும் வளர்ந்தால்தான் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அப்படி இல்லாமல் குழந்தைகளை போன்சாய் மரங்களைப் போல அடக்கி அடக்கி நம் கைக்குள் வைத்துக் கொண்டு வளர்க்க நினைத்தால் சீக்கிரம் சோர்ந்து விடுவார்கள்.

Post a Comment

0 Comments