கண்டியில் ஒன்பது மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக, பொலிஸாரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கண்டி ஹந்தான பிரதேசத்தில் இயங்கும் மனித தலைமைத்துவ உயர்கல்விப் பயிற்சி பாடநெறியில் இணைந்திருந்த 9 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15 முதல் 17 வயது வரை மாணவிகள் 9 பேர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கண்டி பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பயிற்சி மையத்தில் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக மூன்று மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பயிற்சி மையத்தினுள் தங்களுக்கு மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களை தாங்கி கொள்ள முடியாத மூன்று மாணவிகள் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஹந்தான பிரதேச காடொன்றில் மறைந்திருந்த அவர்கள், பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த முறை இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் சித்தியடைய தவறிய மாணவிகளின் மனநிலையை வளர்ச்சியடைய செய்து அவர்களை மீண்டும் பரீட்சைக்கு தயார்படுத்தும் மனித தலைமைத்துவ உயர் கல்விப் பயிற்சி பாடநெறி தொடர்பில் பத்திரிகையில் வெளியாகிய விளம்பரத்தின் ஊடாக மாணவிகள் இணைந்துள்ளனர்.
மாணவர்களின் பெற்றோர் அதற்காக ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தை பாடநெறி கட்டணமாக செலுத்தியுள்ளனர்.
குறித்த பாடநெறிக்காக விடுதியில் தங்க வைக்கப்படும் மாணவிகள் தங்கள் பெற்றோரை மாதம் ஒரு முறை மாத்திரம் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோருக்கு அறிவிக்காமல் குறித்த மாணவிகளை இரண்டு நாட்கள் இரவு நேரத்தில் வெளியே அழைத்து சென்றுள்ளனர். துஷ்பிரயோகத்திற்காக வாகனம் ஒன்றில் குறித்த மாணவிகளை அழைத்து சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளில் திருப்தியடைய முடியவில்லை என பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
0 Comments